
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று தொடங்கினார்.
இதற்காக, நேற்று காலை மேட்டுப்பாளையம் சென்ற அவர், அங்குள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, தேக்கப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். இன்னும் விவசாயிகளுக்கு நிறைய செய்ய வேண்டும். அதற்கு என்னிடம் பல திட்டங்கள் இருக்கிறது. அதை இப்போதே சொல்ல முடியாது. சொன்னால் வெளியே கசிந்துவிடும் என்றார். அப்போது கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பவானி நதிநீர் பாதுகாப்புக் குழு நிர்வாகியான விவசாயி அரங்கசாமி, 60 ஆண்டு காலமாகத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்ட அத்திக்கடவு – அவினாசித் திட்டம் 2019 இல் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்த திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி பேசினார். அப்போது, குறுக்கிட்டுப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசுக்கு அனுப்பிய போது அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்றார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாய சங்கங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். வேறுவழியின்றி அதிமுக விவசாய அணி நிர்வாகிகளை அழைத்து வந்து கூட்டத்தைக் காண்பித்தனர். இதை உறுதிபடுத்தும் வகையில், எடப்பாடி பழனிச்சாமியிடம் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு உறைகளில் எடப்பாடியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே சாலைப் பயணம் நடத்தினார்.
இதைல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் அர்விந்த் மேனன்,வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.அதேசமயம்,முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை.
அதேசமயம், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்தார்.இத்தனைக்கும் அவர் நேற்று கோபியில்தான் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுகவுக்குள் இருக்கும் உட்கட்சிக் குழப்பம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை என்பது வெளிப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


