எடப்பாடியை நீக்க பாஜக திட்டமிடுகிறது – முன்னாள் அமைச்சர் ஒப்புதல்

அண்மையில் ஒன்றிய உள்துறை அமித்ஷா கொடுத்த நேர்காணலில், தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அக்கட்சி விவகாரங்களை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள்.

என்று கூறியிருந்தார்.

இதில், அதிமுகவைச் சேர்ந்தவர்களே முதலமைச்சர் என்று அமித்ஷா பொத்தாம் பொதுவாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏனெனில் அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் எனப்பல பொறுப்புகளை வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக் குறிப்பிடாமல் அதிமுகவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால்,பாஜகவுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசிவந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் சேர்த்தது பாஜக.

அதனால், செங்கோட்டையனையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என பாஜக விரும்புகிறது அதனால்தான் எடப்பாடி பெயரை அமித்ஷா சொல்லவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் என்கிற தகுதியுடனிருக்கும் ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடியை விட பாஜகவுக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதால் அவரையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் திட்டமிடுகிறார்கள்.அதனால்தான் எடப்பாடி பெயரைச் சொல்லவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

இவ்விருவர் தவிர இன்னொரு பெயரும் தற்போது அடிபடுகிறது. அது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர்தான்.

அதிமுக பாஜக கூட்டணி அமைய முழுமூச்சாகப் பாடுபட்டவர் அவர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.அதனால் அவரையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பாஜக நினைக்கிறது.அதன் வெளிப்பாடுதான் அண்மையில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் தம்பியிடன் சென்று எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டது என்று சிலர் சொல்கிறார்கள்.

இப்படிச் சொல்வதெல்லாம் அதிமுகவிலிருப்போர்தான் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இவற்றிலிருந்து முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை பாஜகவே முடிவு செய்யும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

நேற்று முன் தினம் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள், அதிமுகவில் இருந்து ஒரு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது முதலமைச்சர் வேட்பாளரைத் தெளிவுபடுத்தாத நிலை உள்ளதே?’ என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, இதில் டெல்லி எடுக்கிற முடிவுதான். உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறியபிறகு, அதற்கு அடுத்தாற்போல் யார் பேசினாலும், அது சரியில்ல என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போது, அதைப்பற்றியே கேள்வி கேட்டு, அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது சரியா? என்றார்.

டெல்லி முடிவு செய்யும் என்று எடப்பாடி சொன்னது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா ஒரு நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில்,

முதலமைச்சராக அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் வருவார் என அமித்ஷா சொல்லி இருப்பதைப் பார்த்தால் பாஜக-வுக்கு வேறு திட்டம் இருக்கும் போல் தெரிகிறதே? என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, முதலமைச்​சர் தேர்​வைப் பொறுத்​தவரை பாஜக-​வின் திட்​டம் ஒன்​றும் பலிக்​காது. இபிஎஸ்ஸை முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தித்​தான் தேர்​தலில் போட்​டி​யிடு​கி​றோம். எனவே, இபிஎஸ் தான் முதலமைச்​ச​ராக வருவார் என்று பதில் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர்த்து விட்டு வேறொரு முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்ய பாஜக திட்டமிட்டுவருகிறது என்பது உறுதியாகியிருக்கிறது.

முதல்நாள் டெல்லி முடிவு செய்யும் என்று சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.அடுத்தநாள் பாஜகவின் திட்டம் பலிக்காது என்று அன்வர் ராஜா கூறியிருக்கிறார்.

இதனால்,யார் சொல்வது நடக்கும் எனத் தெரியாமல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும்குழப்பம் நிலவுகிறது.

Leave a Response