அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது….
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் 7.7.2025 முதல் 23.7.2025 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையம், 8 ஆம் தேதி கோவை மாநகர், 10 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11 ஆம் தேதி விழுப்புரம், 12 ஆம் தேதி கடலூர், 14 ஆம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி,15 ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர், 16 ஆம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17 ஆம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18 ஆம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர், 19 ஆம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21 ஆம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22 ஆம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23 ஆம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேற்று வெளியானதும் வழக்கம்போல சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன.
ஏனெனில்?
ஜூன் மாதம் 20 ஆம் தேதி வாக்கில் அதாவது பத்துப் பனிரெண்டு நாட்கள் முன்பே, ஜூலை மாதம் 8 ஆம் தேதி அமித்ஷா சென்னை வர இருப்பதாக தகவல் வெளியானது. அப்போது, பாஜக மூத்த நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து கருத்துகள் கேட்க இருக்கிறார்.அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் இராமதாசு, தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகவும், கூட்டணி குறித்துப் பேச இருப்பதாகவும் தெரிகிறது. நிர்வாகிகள் கூட்டம் முடிவில் கூட்டணி குறித்த மேலும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு, அமித்ஷா சென்னை வருகையின்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட இன்னும் பல கட்சித் தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
இதன்படி, அமித்ஷா சென்னை வரும் நேரத்தில் கோவையில் நிகழ்ச்சி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.இதனால் அமித்ஷா சந்திப்பைத் தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சி நிரலை வடிவமைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கூட்டணி அறிவித்த பிறகு அடுத்தடுத்த விசயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் அவர் வரும்போது இவர் விலகிச் செல்கிறார்.இதனால் அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா? என்கிற ஐயம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.