போதைப்பொருள் வழக்கில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மகன்கள்?

நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில், 22.05.2025 ஆம் தேதி அன்று மது அருந்தச்சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை விசாரிக்கப் போக போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வியாபாரம் தொடர்பாக பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின.அதன் தொடர்ச்சியாக பிரதீப்குமார். கானா நாட்டைச்சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த்,நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரசாத்தை காவலில் எடுத்து விசாரித்தது காவல்துறை.அப்போது, பிரசாத் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது….

வார இறுதியில் நான் பார்ட்டி நடத்துவேன். இந்த பார்ட்டியில் மது விருந்து நடக்கும். அதோடு விரும்புகிறவர்களுக்கு மட்டும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படும். என்னுடைய படத்தில் நடித்ததால் ஸ்ரீகாந்த் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் பழக்கம் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் நடிகர்கள், பார்ட்டிக்கு வரும்போது நடிகைகள், சினிமா பிரபலங்களை அழைத்து வருவது வழக்கம்.

அப்படித்தான் பலரும் எங்களது பார்ட்டிக்கு வந்துள்ளனர். பிரதீப்குமாரைப் போல கெவினும் எங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ய ஆரம்பித்தார். அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர். அவர் சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். அவரது அப்பா பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சினிமாவில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து விபசாரத் தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருளும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அதில் பணம் அதிகமாக வந்ததால், விபசாரத் தொழில், போதைப் பொருள் விற்பனை இரண்டையும் சேர்த்து செய்கிறார். கெவின் மூலமும் பல நடிகர், நடிகைகள் எனக்கு பழக்கம் ஆகினர். மேலும், விக்னேஷ், லிங்கேஷ் உள்பட சிலரிடமும் நான் போதைப் பொருள் வாங்கி உள்ளேன். என்னிடம் நாய் சேகர் பட கேமராமேன் விக்கி, இயக்குநர் ஷாம் மற்றும் சார்பட்டா நடிகர் ஒருவர் போதைப் பொருள் வாங்கியுள்ளனர். அவர்களும் அடிக்கடி போதை விருந்துக்கு வருவார்கள்.

அதேபோல நடிகர் கிருஷ்ணாவும் அவரது நண்பர்களான நடிகர்கள், இயக்குநர்கள் சிலரும் வருவார்கள். அதிமுக விஐபிக்களின் மகன்களும் வருவார்கள். அவர்கள் மது அருந்துவார்கள். அவர்களுக்கும் கெவின், பிரதீப்குமாரை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். அவர்கள் மூலம் போதைப் பொருட்கள் வாங்கினார்களா? என்று எனக்குத் தெரியாது

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.

இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மகன்கள் சிக்குவார்கள் என்று சொல்லப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response