
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமம் எடுக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.
இதை இரத்து செய்து, டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியினர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் சட்டசபையில் சனவரி 9 ஆம் தேதி டங்ஸ்டன் திட்டத்தை இரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து ஒன்றிய அரசு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதனிடையே, பாஜக பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையில் அரிட்டாபட்டி பகுதி கிராமத்தினர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். இவர்கள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்துப் பேசினர்.
பின்னர் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், ஒன்றிய அமைச்சர், பிரதமருடன் பேசிய பிறகு, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ஒன்றிய அரசு இரத்து செய்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து, விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை இரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்கு டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில்,தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்தது.
இச்செய்தி வெளியானதும்,எங்களுக்குத் துணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர் முழக்கமிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கும், என்னுடைய முதலமைச்சர் பதவியே போனாலும் பரவாயில்லை என்று ஒன்றிய அரசின் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என அரிட்டாபட்டி கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.


