தமிழுக்கும் தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனவரி 23 அன்று,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அவ்விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை….

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி”-என்று பெருமை பொங்க நாம் சொன்னபோது வெற்றுப் பெருமை பேசுகிறார்கள் என்று, சிலர் விமர்சித்தார்கள். அதற்குக் காரணம், தமிழ்ச் சமுதாயத்தில் வந்து புகுந்த இழிவுகளும் – அதனால் ஏற்பட்ட தேக்க நிலையும்தான் காரணம்! இந்த இடைக்கால இழிவுகள் நீங்க காலம்தோறும் எண்ணற்ற புரட்சியாளர்கள் தோன்றினார்கள். அய்யன் வள்ளுவர், வள்ளலார் தொடங்கி அயோத்திதாசப் பண்டிதர் என அந்தப் பட்டியல் நீளமானது… அவர்களின் தொடர்ச்சியாகதான், பகுத்தறிவையும் இனமான உணர்வையும் ஊட்டினார் தந்தை பெரியார்!

பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த நமது தமிழினத்தை, “ஏ தாழ்ந்த தமிழகமே”-என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய சிந்தனையாலும், நா நயத்தாலும் தட்டியெழுப்பினார்! சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட நம்முடைய வாழ்வியலை திராவிட இயக்க மேடைகள்தோறும் எடுத்துச் சொன்னோம்! இலக்கியங்கள் படைத்தோம். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் “இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்… இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்… அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்!”-என்று சங்கத்தமிழைச் சாறெடுத்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொன்னார்!

ஆனால், இந்த இலக்கியப் பெருமைகளை மெய்பித்து, பரந்துபட்டு வாழ்ந்த தமிழினத்தின் புதையுண்ட வரலாற்றை மீட்டெடுத்து, அறிவுலகத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றும்; வரலாற்றுப் படிப்பினைகள் வழியாக, முன்னேறும் நிகழ்காலத்தில் இருந்து, மேலும் சிறப்பான எதிர்காலத்துக்கு தமிழர்களை வழிநடத்த வேண்டும் என்றும், நம்முடைய உழைப்பை செலுத்தி வருகிறோம்! அந்த உணர்வோடுதான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்! ஐம்பெரும் விழாவாக இந்த விழாவை நடத்திக்கொண்டு இருக்கிறோம்!

இரும்பின் தொன்மையை நாட்டுக்கு அறிவித்தல் ’இரும்பின் தொன்மை’ நூலை வெளியிடுதல் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கும் அடிக்கல் நாட்டுதல் கீழடி இணையத் தளத்தைத் தொடங்கி வைத்தல் என்று தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் விழாவாக இந்த விழா சிறப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது!

தொன்மையும் திண்மையும் வளமையும் பெருமையும் கொண்ட தமிழ்நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும், அரசு முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகிய இருவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

இந்த விழாவின் மூலம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக நேற்று சொல்லியிருந்தேன்… பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருகின்றவரையில் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தமிழர்களின் தொன்மையை உலகத்திற்கே சொல்லும் ஒரு மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன்… இங்கு கூடியிருப்பவர்களும், நேரலையில் இந்த விழாவை பார்ப்பவர்களும் கவனமாக கேளுங்கள்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது! இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல. உலகிற்கே மீண்டும் சொல்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்!

5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது! இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ஆம் ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புனே நகரில் இருக்கும் பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் – மாதிரிகள், பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியிலிருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் மற்றும் OSL பகுப்பாய்வு காலக்கணக்கீடுகள் அடிப்படையில் கி.மு. 3345-லேயே, தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று தெரிய வருகிறது. அதற்கான ஆய்வு முடிவுகள் இதோ!

இந்த பகுப்பாய்வு முடிவுகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டைய தொழில்நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர் பெருமக்கள். அந்த அறிஞர் பெருமக்கள் எல்லோரும் இந்த அவையில் கூடியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருசேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

இரும்பின் காலம் குறித்த முடிவுகளுக்கு ஆதரவாகவும் – கண்டுபிடிப்புகளை பாராட்டியும் இருக்கிறார்கள். இது போன்று பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியர் ’பத்மஸ்ரீ திலீப் குமார் சக்கரவர்த்தி’ அவர்களும், ஒன்றிய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் ’முனைவர் ராகேஷ் திவாரி’ அவர்கள் உட்பட எல்லா அறிஞர் பெருமக்களும் பகுப்பாய்வு முடிவுகளைப் பாராட்டி தங்களின் கருத்துகளை சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் தொகுத்துதான் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் தொல்லியலில் வல்லுநராக இருக்கும் ஆய்வாளர்களிடம் பகுப்பாய்வு முடிவுகள் பற்றி கருத்து பெறப்பட்டு, அந்த அறிஞர்களின் கருத்துகளும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது.

அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் இரும்புப் பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும், இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும்; சான்றுகளை வழங்கி தெளிவுபெற வைக்கும். அப்படியான வலுவான சான்றுகளுக்காக நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம்.

இருந்தாலும், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவிலிருந்து, இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறுவோம்.

அதாவது, 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை! உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதை நாம் கம்பீரமாக சொல்லலாம்.

தமிழ்த்தாயின் தலைமகனான பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்திருக்கும் இந்த அறிவுச் சுரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவின் வழியாக பெருமையுடன் சொல்கிறேன். “பேரறிஞர் அண்ணா அவர்களே! இதோ நமது உயர்வான தமிழ்நாட்டைப் பாருங்கள்…!” – “அன்று கிண்டல் கேலி பேசியவர்கள் எல்லாம் நம்மை கற்பனாவாதிகள் என்று குற்றம் சொன்னவர்கள் எல்லாம் வாயடைத்து நிற்கிறார்கள் பாருங்கள்” – “இலக்கியத்தில் இருப்பதெல்லாம் வரலாறு ஆகாது” என்று சிறுமைப்படுத்தி பேசியவர்கள் எல்லாம் அறிவியல்பூர்வமாக நம்முடைய வரலாற்றை நிரூபணம் செய்வதைக் கண்டு திகைத்து நிற்கிறார்கள் பாருங்கள்!

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த ஆய்வுகள், பல்வேறு திருப்புமுனைகளையும் உருவாக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6-ஆம் நூற்றாண்டே தொடங்கிவிட்டது என்று கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியிருக்கிறது.

பொருநை ஆற்றங்கரையில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் பயிர்த் தொழிலில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என்று சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு, தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் உலகுக்கு அறிவித்திருக்கிறேன்.

இத்தகைய அகழாய்வு முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்ட வரலாற்றுக்கே முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற ஆய்வுகளை தொல்லியல் துறை தொடர்ந்து செய்யவேண்டும் என்று துறையின் அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களையும் – துறை ஆணையரையும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்ததெல்லாம் இலக்கியப் புனைவுகள் அல்ல; அரசியலுக்காகச் சொன்னவை அல்ல; எல்லாம் வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்று மெய்ப்பிக்க வேண்டிய கடமையை நம்முடைய திராவிட மாடல் அரசு எடுத்துக் கொண்டுள்ளது! ஏற்றுக் கொண்டுள்ளது! தமிழினின் பெருமையை தமிழினத்தின் தொன்மையை உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதை சொல்லும் வரலாற்றுப் பெருமைமிக்க இந்த விழா, நாம் வாழும் காலத்தில், நான் ஆளும் காலத்தில் நடைபெறுவது என் வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! பெருமையிலும் பெருமை! பெறுதற்கரிய பெருமை!

இந்தப் பெருமையை நம்முடைய குழந்தைகளிடம் நாம் எடுத்துச் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட பெருமைமிக்க தமிழ்ச்சமூகம், உலகுக்கே வழிகாட்டும் அறிவார்ந்த சமூகமாக வளரவேண்டும் என்று எதிர்காலத்துக்கான திசையை காட்டவேண்டும்! பழம்பெருமையை பேசுவது என்பது புது சாதனைகள் படைக்க ஊக்கமாக அமைய வேண்டும்! என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Leave a Response