வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டஉச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!வெளியே வேறு இடத்தில் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு ஆய்வு மையக் கட்டடங்கள் எழுப்ப, தமிழ்நாடு அரசு ஆணையிட்டதை – இடம் மாற்றி வள்ளலார் பெருவெளிக்கு வெளியே கட்டுமாறு கோரி, வள்ளலார் அன்பர்களும், தெய்வத் தமிழ்ப் பேரவை, வள்ளலார் பணியகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றும் தோழமை அமைப்புகள் பலவும், 2024 ஆம் ஆண்டு பல போராட்டங்களை நடத்தினோம்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, தீவிரமான பிடிவாதம் காட்டி, வள்ளலார் சத்திய ஞானசபைப் பெருவெளியில் முரட்டுத் தனமாக பள்ளங்கள் தோண்டி, கட்டுமான வேலைகளைத் தொடங்கியது. அதைக் கண்டித்துப் போராடிய வடலூர் பார்வதிபுரம் மக்கள் மீது காவல்துறையை ஏவி, கைது செய்து, அறவழிப் போராட்டத்தைக் கலைத்தது. பெண்கள் – ஆண்கள் உட்பட 20 பேர் மீது பிணையில் வர முடியாத வழக்குகள் போட்டது தமிழ்நாடு அரசு!
வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவது, வள்ளலாரின் பெருவெளி மெய்யியலுக்கு எதிரான செயல் என்றும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வள்ளலார் அன்பர்கள் வழக்குப் போட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றம் வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் – அதாவது அ. திடலில் (A – Site) பன்னாட்டு மையக் கட்டடங்கள் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. அத்தடை செயல்பாட்டில் உள்ள நிலையில், சத்திய ஞானசபைச்கு சற்றுத் தள்ளி உள்ள வள்ளலார் ஆ.திடலில் (B – Site) பன்னாட்டு மையக் கட்டடங்கள் கட்டத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
அதை எதிர்த்தும் தடை கோரியும் வினோத் இராகவேந்திரா என்னும் வள்ளலார் அன்பர் புதுதில்லியில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.
அவ்வழக்கை 20.1.2025 அன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷூ தூலியா, கே.வினோத்சந்திரன் ஆகியோர் அமர்வு, வடலூர் ஆ. திடலிலும் (B – Site) வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தும், ஏற்கெனவே வடலூர் அ.திடலில் (A – Site) புதிய கட்டுமானங்கள் எழுப்ப சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
வள்ளலாரின் பெருவெளிக் கோட்பாட்டை – வழிபாட்டு முறையை தமிழ்நாடு அரசு சிதைக்கிறதே என்று மனம் கலங்கித் தவித்த வள்ளலார் வழி மெய்யன்பர்களுக்குப் பெரும் ஆறுதலாக – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குத் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
அருள்கூர்ந்து, வள்ளலார் சத்திய ஞானசபைப் பெருவெளி (அ. திடல்) மற்றும் வடலூர் வள்ளலார் ஆ.திடல் (B – Site) ஆகிய இரு இடங்களிலும் வள்ளலார் பன்னாட்டு மையக் கட்டுமானங்கள் எழுப்புவதை மாற்றி, அதே வடலூர் பகுதியில் வேறு இடத்தில் அப்பன்னாட்டு மையக் கட்டடங்களை எழுப்புமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வள்ளலார் நினைவாக நற்செயல் செய்ய முன்வரும்போது, வள்ளலார் மெய்யியலுக்கு முரணாக, அவர் உருவாக்கிய பெருவெளித் திடல்களில் கட்டிடம் அமைப்பதைக் கைவிட்டு, வெளியே கட்டிட முடிவெடுங்கள், உங்களுக்கும் நல்லது; வள்ளலார் அன்பர்களுக்கும் மன அமைதி கிடைக்கும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.