
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை பிரசாரம் செய்த வளர்மதியும், ஜெயந்தியும் ஜூலை-12 ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை-12 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு, அங்கு ஜெயந்தி மட்டும் உடனடியாக விடுவிக்கப்பட்டு உள்ளார்.வளர்மதி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகச் சொல்லி காவல்துறையினர் முறையிட அவர் மட்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
17-07-2017 திங்கள் அன்று சேலம் காவல் ஆணையரால் வளர்மதி மீது குண்டர் தடுப்புக் காவல் ஆணை போடப்பட்டு கைது செய்யப்பட்டு சேலத்தில் இருந்து கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குண்டர் சட்டத்தின் கீழ் வளர்மதியை கைது செய்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு கோவை சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, வளர்மதி இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வளர்மதி, அடிப்படை உரிமைகளுக்காக போராடினால் காவல்துறையினர் கைது செய்வதாக குற்றம் சாட்டினார். அத்துடன், கோவையில் நடைபெற்ற போராட்டத்திலும் வளர்மதி பங்கேற்றார்.


