அண்மையில் நடந்த நெகிழ்வான நிகழ்வொன்றை கவிஞர் வா.மணிகண்டன், தன்னுடைய நிசப்தம் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். அது அப்படியே இங்கே….
கிட்டத்தட்ட பனிரெண்டு அல்லது பதின்மூன்று வருடங்களுக்கு முன்பாக தி.நகர் அபிபுல்லா சாலையில் பாடலாசிரியர் அறிவுமதியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அந்த அலுவலகம் ஏகப்பட்ட பேருக்கு வேடந்தாங்கல். தமிழில் ஆர்வமிருந்து திரைத்துறைக்குள் நுழைய விரும்புகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கே வந்து போவார்கள். அறிவுமதியின் பாடல்கள் அப்பொழுது கொடிகட்டிக் கொண்டிருந்தன. ஊட்டி, கொடைக்கானலில் எஸ்டேட்களும், நீலாங்கரையில் மிகப்பெரிய மாளிகையும் கட்டியிருக்க வேண்டிய பாடலாசிரியர் அவர். வருகிற வாய்ப்புகளையெல்லாம் புதிதாக நுழைந்திருக்கும் ஒருவரைக் காட்டி ‘தம்பி நல்லா எழுதுறாரு…வாய்ப்பை அவருக்குக் கொடுங்க’ என்று சொல்லிவிட்டு தனது முதுகை ஏணியாக்கிக் கொண்டவர் அறிவுமதி. முகதாட்சண்யத்துக்காக இதைச் சொல்லவில்லை. திரைத்துறையை, அறிவுமதியைத் தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் இது தெரியும்.
அந்தச் சமயத்தில் திரைத்துறையில் பாடல் எழுதிவிட வேண்டும் என்கிற ஆசையில் சுற்றிக் கொண்டிருந்தேன். நா.முத்துக்குமார்தான் அறிவுமதியைப் பார்க்கச் சொன்னார். அப்பொழுது வரைக்கும் எழுதி வைத்திருந்த கவிதைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு இரவு கவிந்திருந்த வேளையில் அபிபுல்லா சாலைக்குச் சென்றிருந்தேன். அறிவுமதியின் அலுவலகத்தைக் கண்டுபிடித்து அடைந்த போது மழையில் மொத்தமாக நனைந்திருந்தேன். அங்கே ஒரு பெருங்கூட்டம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. துண்டை எடுத்துக் கொடுத்து துவட்டிக் கொள்ளச் சொல்லி கவிதைகளை வாங்கியவர் மடமடவென்று ஒரு முன்னுரையை எழுதிக் கொடுத்தார். ‘எழுது’ என்று சொல்லிக் கிடைத்த அங்கீகாரம் அது.
அதன் பிறகு திரைத்துறையில் விருப்பம் குன்றி திசை மாறியது வேறு கதை.
பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாம் தேதியன்று அறிவுமதியைச் சந்தித்த போது ‘இன்னமும் அபிபுல்லா சாலையில்தான் இருக்கீங்களாண்ணா?’ என்றேன். முன்னாள் ஆசிரியரான அரசு அவர்களின் இருபத்தைந்தாவது நினைவேந்தல் விழாவுக்காக கோபி வந்திருந்தார். ‘அங்க இருந்துதான் துரத்தி விட்டுட்டாங்களே’ என்றார். இதுதான் அறிவுமதி. அவரது எளிமை, பொருளாதார நிலை என எல்லாவற்றையும் ஒற்றை வரியில் காட்டிவிட்டு சிரித்தார். திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே ‘இனி திரையிசைப் பாடல்கள் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்துவிட்டு சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என்று தனது வட்டத்தைச் சுருக்கிக் கொண்டுவிட்டார். அதற்கு மேல் அது குறித்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இன்றைக்கும் கூட சட்டைப்பையில் பத்து ரூபாய் கூட இல்லாமல் நண்பர்களை நம்பிக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்புகிறவர் அவர் என்று அவரது நெருங்கிய வட்டத்தினருக்குத் தெரியும்.
கடந்த மாதம் எம்.ஜி.ஆர் காலனி என்ற நாடோடிகள் குடியிருப்பு மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்குச் செல்வதற்காக நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து பணம் கொடுத்திருந்தோம். நினைவிருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஐந்து மாணவர்கள் சென்றிருந்தார்கள். அதில் நான்கு பேர் மூன்றாமிடம். வெண்கலப் பதக்கத்தோடு திரும்பியிருக்கிறார்கள். இந்தத் தகவல் கிடைத்தவுடன் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தேசிய அளவிலான போட்டிகளில் வென்றிருப்பது முதல் படி. இனி நிறையப் படிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் அந்த மக்கள் தாண்டுவார்கள்.
அந்தக் காலனிக்கு அறிவுமதியை அழைத்துச் செல்லலாம் என்று ஆசிரியர் தாமஸூடன் பேசி வைத்திருந்தோம். தாமஸ் அவர்களின் சகோதரர் தேவநேயன்தான் அறிவுமதியை கோபிக்கு அழைத்து வந்திருந்தார். கேட்டவுடனேயே சரி என்று சொல்லிவிட்டார்கள். நினைவேந்தல் நிகழ்ச்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் காலனிக்குச் சென்றோம்.
இரவு எட்டரை ஆகியிருந்தது. காலனி மக்கள் நான்கைந்து நாற்காலிகளைப் போட்டுவிட்டு வட்டமாக நின்றிருந்தார்கள். அறிவுமதி, ‘எதுக்கு நாற்காலி? எல்லோரும் கீழேயே அமர்ந்துவிடலாம்’ என்று அமர்ந்துவிட்டார். அங்கேயிருந்த மக்கள் பதறிப் போனார்கள். அவர் எது பற்றியும் யோசிக்கவில்லை. கீழே அமர்ந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசினார். காலனி மக்களுக்கு அத்தனை ஆர்வம். ஆரவாரத்துடனேயே இவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆரம்பித்து நாடோடிகளின் வரலாறு வரை நிறையப் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வரியும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் காண முடிந்தது.
இத்தகைய எளிய மனிதர்களை அதே சமயம் ஈர்க்கக் கூடிய மனிதர்களை காலனிக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்ல வேண்டும். அறிவுமதியண்ணனே இனி தொடர்ந்து வருவதாகச் சொன்னார். தம்போரா மக்கள் பெயருக்குத்தான் நாடோடிகள். ஆனால் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள். அவர்களது காலனியில் மது அருந்துகிறவர்கள் இல்லை. இந்தத் தலைமுறையில் அவர்களில் புகைபிடிப்பவர்கள் இல்லை. பாக்குப் போடுவது கூடத் தடை செய்யப்பட்ட காலனி அது. மெல்ல மெல்ல மேலே வருகிறார்கள். இன்னமும் யாரும் அரசு வேலைக்குச் செல்லவில்லை என்றாலும் குழந்தைகள் கல்லூரி வரைக்கும் செல்கிறார்கள். அரசு வேலைகளில் சேர்வதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். இத்தகைய மனிதர்களை ஊக்கப்படுத்துவதற்கும் திறமைகளைக் கைவிட்டுவிட வேண்டாம் என்று சொல்வதற்கும் அறிவுமதி மாதிரியானவர்கள் தேவைப்படுகிறார்கள்.
கிளம்பும் போது ‘இந்தக் காலனியை விட்டு போறதுக்கே மனசு இல்ல’ என்றார். என்னிடம் ‘நல்ல மக்கள்..இவங்களை விட்டுடாத’ என்றார். விட்டுவிடுகிற திட்டமெல்லாம் இல்லை. ஏற்கனவே சொன்னது போல ஒருவரையாவது ஒலிம்பிக் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவராவது அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும். அத்தனை குழந்தைகளும் கல்லூரிப் படிப்பைத் தொட வேண்டும். அவர்களே இதையெல்லாம் அடைந்துவிடுவார்கள். வழிகாட்டினால் போதும். அதைத் தொடர்ந்து செய்யலாம்.
பெங்களூருவாசி பிரபு ராஜேந்திரன் எம்.ஜி.ஆர் காலனி மக்களுக்காக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தார். அத்தனையும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். காலனிக்காரர்கள் ஆலம் விதை என்ற ஒரு நூலகத்தை வைத்து அதற்கு நூலகப் பொறுப்பாளராக காலனி மாணவர் ஒருவரையே நியமித்து அட்டகாசமாக பராமரிக்கிறார்கள். ஆனால் புத்தகங்கள்தான் மிகக் குறைவாக இருக்கின்றன. பிரபு அனுப்பி வைத்திருந்த புத்தகங்களையும் அறிவுமதியே மக்களிடம் வழங்கினார். ஒரு கட்டு புத்தகத்தை குழந்தைகளை அழைத்துக் கொடுத்தார். இன்னொரு கட்டு புத்தகத்தை பெண்களை அழைத்துக் கொடுத்தார். இன்னொரு கட்டுப் புத்தகத்தை மாணவர்களை அழைத்துக் கொடுத்தார். அவர்களுக்கு வாய் கொள்ளாச் சந்தோஷம்.
‘படி’ ‘விளையாடு’ இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மக்கள் இரண்டையுமே இனி செய்வார்கள்.