திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் – திமுக தலைவர் தனியாக சட்டமன்றம் செல்வாரா?


தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17 – 2016) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிப்போனதும், விவாதங்கள் தொடர்ந்தன.

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் பேச்சின் போது, “நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது” என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.

அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்ட நேரமாகக் குரல் கொடுத்தனர். எனவே அவர்களை அவையை விட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒருவாரம் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை மானியக் கோரிக்கையில் நாங்கள் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

இதேபோன்றதொரு நிகழ்வு 2006 ஆம் ஆண்டும் நடந்தது.

அப்போது, 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சட்டசபையில் அடிதடி ரகளை ஏற்பட்ட பிறகு அ.தி.மு.க. உறுப்பினர்கள் 60 பேரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவ தும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தர விட்டார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சட்டசபைக்கு தன்னந்தனியாக சென்றார். கவர்னர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இடை இடையே தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர் களுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்.

இப்போது திமுக தலைவருக்கு இந்த இடைநீக்கம் பொருந்தாது. காவல்துறை மானியக்கோரிக்கையின் போது அவர் தனியாக சட்டமன்றம் செல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அவ்வாறு அவர் சென்றால் அவர்தான் கதாநாயகன். அப்படிச் செய்வாரா? அதேபோல அன்றைக்கு ஜெயலலிதா வந்து பேசியதை திமுக அனுமதித்தது. இன்றைக்கு ஜெயலலிதா அனுமதிப்பாரா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Leave a Response