இந்தியா முதன்மை நாடாக மாறும் – உலகெங்குமிருந்து வந்து ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் உறுதி

கொங்கு பல்தொழில் நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் மனவளப் பயிற்சி முகாம் – டர்ன் அரவுண்ட் 2016, திம்பத்தை அடுத்துள்ள தலமலையில் ஞாயிறு & திங்கள் (ஆகஸ்ட் 14 & 15, 2016) அன்று நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இந்தியாவின் பல பகுதிகளிலும், 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தார்கள். அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதிய விருந்துக்குப் பின்னர் கொங்கு வெள்ளாளர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரும் தாளாளருமான குமாரசாமி உறியடி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். அதன் பின்னர் வந்திருந்த அனைவரும் ஹனிபீ, ரம்மி, மாமு, நெப்போலியன் என்று 4 அணிகள் அமைத்து மாட்டுவண்டி சவாரி, சாக்கு ஓட்டம், சடுகுடு என கிராமிய விளையாட்டுக்களோடு வாலிபால், பலூன் பர்ஸ்ட் போட்டிகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர். மாலையில் கோவை ஜெகன் மற்றும் குழுவினரின் தொடர் நகைச்சுவை நிகழ்ச்சி, டீஜே பிரதீப்பின் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக், ஜாம், டி20, கேம்ப் ஃபயர், மலரும் நினைவுகள் என மன இறுக்கம் தளர்த்தும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

முகாம் குறித்து தாளாளர் குமாரசாமி கூறுகையில், “பெருந்துறையில் 1983-ம் ஆண்டு துவங்கப்பட்ட எங்கள் கல்லூரியில் இதுவரை 33 பேட்ச்களில் சுமார் 15000 பொறியியல் பட்டயதாரிகளை உருவாக்கியுள்ளோம். அவர்களில் பலர் சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் டெக், கெமிக்கல், ஆட்டோமொபைல், ரோபாட்டிக், இன்ஸ்ட்ரூமென்டேஷன், தகவல் தொழில்நுட்பம் என 10 பொறியியல் துறைகளில் வல்லுனர்களாக உள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனங்களிலும், அரசாங்கத்திலும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். சிலர் சுயதொழில் துவங்கியும், இன்னும் சிலர் விவசாயம், அரசியல், கலை, ஊடகத்துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். வெளிநாடுகளில் மட்டும் சுமார் 3500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதால் கிடைக்கும் பேராற்றலை இந்த தேசத்திற்கு எங்கள் பங்களிப்பாக அர்ப்பணிக்கிறோம். இதன் மூலம் வருங்காலத்தில் இந்தியா, திறன் மிக்க மனித வளத்தில் முதன்மை நாடாக மாறும்” என்று தெரிவித்தார்கள்.

டர்ன் அரவுண்ட் சங்கத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, “கடந்த 2005-ஆம் ஆண்டு கொடைக்கானலில் முதல் நிகழ்ச்சி நடத்தினோம். இதன் அடுத்த கட்டமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதில் திறன் மேம்பாட்டு முகாம், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள், குடும்ப சுற்றுலாக்கள், வெளிநாட்டு சுற்றுலாக்கள், தொழில் முனைவோர் மேம்பாடு என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி பலரையும் பயனடையச் செய்தோம். குழுவாக செயல்படுவதன் மூலம், வேலை வாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்வது எளிதாக இருப்பதோடு சங்க உறுப்பினர்களுக்கு பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது” என்றார்.

முகாமில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், “பணிச் சூழல், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், நகர வாழ்க்கை மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு இது போன்ற வடிகால்கள் இல்லையென்றால் வாழ்க்கை மிகக் கடினமாக இருக்கும். ஆண்டுக்கொருமுறை அனைத்து நண்பர்களையும் சந்திப்பது அந்த ஆண்டு முழுவதும் எங்களை உற்சாகமாக வைத்திருக்கிறது” என்றனர்.

முதல்நாள் மனவளப் பயிற்சி, இரண்டாம் நாள் வனவளம் காக்கும் முயற்சி என நடைபெற்றுவரும் 2 நாள் முகாமிற்கு தலமலை சக்தி ஃபார்ம்ஸ் ஜோதீஸ்வரன், டர்ன் அரவுண்ட் கெளரவத் தலைவர் ரவிசந்திரன், தலைவர் ராஜேஷ் ராஜப்பா, செயலாளர் தீபக் ராஜா, பொருளாளர் தினேஷ், ஒருங்கிணைப்பாளர் செழியன், நிர்வாகிகள் சோமசுந்தரம், கந்தசாமி, அருள்முருகன், சாய்ராம், பிரவீன், தியாகராஜன், துரைக்கண்ணன், ஆனந்த், செந்தில்வேல், அரவிந்தன், தமிழ்ச்செல்வன், பிரேம்நாத், கபிலன், தீனதயாளன், பூபதிராஜா, மீரா உள்ளிட்ட 200 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Response