
இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும்்எனக்கோரி திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….
தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும்,4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அதேநேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்ககூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.
இந்தத்துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குநராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் பனகல் அரசர் முதன்முதலாக்க் கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத்தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act) கொண்டுவரப்பட்டது. அப்போதும் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தது.
பல்வேறு நம்பிக்கை பிரிவுகளைக் கொண்ட இந்து மதம் இப்போது ஒற்றை மதமாக்கப்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது.
அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை கிடையாது.அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்கள்.
இப்போதும் கோயில் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக தரையில் காத்துக் கிடக்க, பல்லக்கிலும் தேரிலும் இரண்டு அல்லது மூன்று பார்ப்பனர்கள் சட்டை இல்லாமல் பூணூல் அடையாளத்தை காட்டிக் கொண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்து மதமும் இந்துக்களும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத் தானே?
இந்து மதத்தை மட்டுமல்ல,அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறையையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதை உணர்த்துவதாகத்தான் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த பார்ப்பன அமைச்சர் ஏற்கனவே ஒரு பதிவில் பாஜகவின் குரலை எதிரொலித்திருக்கிறார்.அதாவது கோயிலில் தமிழ் வழிபாட்டு உரிமை கேட்பவர்கள் ஏன் முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை நோக்கி அந்த கேள்விகளைக் கேட்பதில்லை என்று அவர் கேட்டிருக்கிறார்.
இப்படி பாஜக மனநிலை கொண்ட ஒருவரை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.இந்தமுடிவு தமிழ்மக்களின் உளவியலுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குநரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
– கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
22.05.26
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


