பிரபல படத்தொகுப்பாளர் காசிவிஸ்வநாதன் நடிகரானார்

கமலின்  ஆளவந்தான் படத்தில் படத்தொகுப்பாளராகப் பணி தொடங்கியவர் காசிவிஸ்வநாதன். அதன்பின், கமலின் பம்மல்கேசம்பந்தம், பாலசந்தரின் பொய்,  ராதாமோகனின் அபியும்நானும், சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, சீனுராமசாமியின் தென்மேற்குபருவக்காற்று, அஜீத் நடித்த வீரம் உட்பட ஏராளமான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

தற்போதும் பல படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் பணியாற்றும் படங்களின் கதையில் நிச்சயம் ஒரு வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம் என்கிற அளவுக்கு தேர்தெடுத்து படங்களை ஒப்புக்கொள்பவர் என்று பெயரெடுத்தவர்.

அண்மையில் தொடங்கப்பட்ட சுசீந்திரனின் மாவீரன் கிட்டு படத்திலும் படத்தொகுப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

அப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்தில் காவல்துறை ஆய்வாளர் வேடமொன்று இருக்கிறதாம்.

அதில் நடிக்க ஒரு சில நடிகர்களை மனதில் வைத்திருந்தாராம் இயக்குநர் சுசீந்திரன். அவர்கள் கிடைக்காமல் போகவே படத்தொகுப்பாளர் காசிவிஸ்வநாத்னையே அந்த வேடத்தில் நடிக்கவைத்துவிட்டாராம்.

முதலில் நடிக்கத் தயங்கிய காசிவிஸ்வநாதன், இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த நம்பிக்கைக்குப் பிறகு நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.

ஏராளமான படங்கள் அதுவும் முன்னணி இயக்குநர்கள் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் நல்ல நடிகராக்வும் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறது. வாழ்த்துகள்.

Leave a Response