மார்க்சிய அம்பேத்கரிய செயல்வீரர்கள் போராட்டத்தால் மதுரையில் நிகழ்ந்த (இனி நிகழக்கூடாத) நல்லவிசயம்

ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று மதுரையின் கோச்சடையில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில், மலக்குழி அடைப்பை நீக்கச் சென்ற சோலைநாதன் என்ற இளைஞர் மலக்குழிக்குள் விழுந்து இறந்துபோனார்.விஷவாயு தாக்கியதுதான் மரணத்திற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

அவரைப் பணியமர்த்தியவர்கள் போதுமான முன்பாதுகாப்பு வசதிகள் செய்து தராததாலேயே மரணம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் இறந்த செய்தி அறிந்தவுடன் பொதுவுடைமை மற்றும் அம்பேத்கரிய செயல்வீரர்கள் போராட்டத்தில் இறங்கி உடனடி இழப்பீடு பெற்றிருக்கின்றனர்.

இது தொடர்பாக எழுத்தாளர் மதிவாணன் எழுதியுள்ள பதிவில்….

நேற்று, அதாவது 06, ஆகஸ்ட் அன்று மதுரையின் கோச்சடையில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் (Gated Community, என்ற மேல்மக்கள் (!) வாழும் அடுக்குமாடி) மலக்குழி அடைப்பை நீக்கப் பணியாற்றிய சோலைநாதன் என்ற தலித் மலக்குழிக்குள் விழுந்து இறந்துபோனார்.விஷவாயு தாக்கியதுதான் மரணத்திற்கான காரணம்….

சோலைநாதன் உள்ளிட்ட பிறரையும் பணிக்கமர்த்தியது சாந்திசதன் என்ற அந்த குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலகுரு.

இப்போது நாம் THE PROHIBITION OF EMPLOYMENT AS MANUAL SCAVENGERS AND THEIR REHABILITATION ACT, 2013 என்ற சட்டம் என்ன சொல்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ‘மனிதத் தன்மையற்ற கையால் மலம் அள்ளும் வேலை நாட்டில் நீடிப்ப‘தாலும், ‘நாட்டின் பல பகுதிகளில் கொடூரமான சாதி அமைப்பு நிலவு‘வதாலும், அதனை ‘எதிர்கொள்ள இதற்கு முன்பு உள்ள பல சட்டங்கள் போதுமற்றவை‘ என்பதாலும் புதிய சட்டம் வேண்டும் என்று இச்சட்டத்தின் முகப்பு வாசகம் சொல்கிறது. மலம் அள்ளும் வேலை செய்பவர்களுக்கு (அதாவது சாதியின் காரணமாக அந்த நிர்ப்பந்தத்தில் உள்ள சாதியைச் சேர்ந்தவர்களுக்கு) நீதியளிக்க வேண்டும் என்கிறது.

மேலும், மலம் அள்ளும் வேலை நிகழ்ந்த கட்டிடத்தின் Occupier குற்றவாளி என்று தெளிவாகச் சொல்கிறது.

வேலையளிப்பவர் போதுமான பாதுகாப்பு சாதனங்களை அளிக்கவில்லை என்றால் அது குற்றம் என்றும் சொல்கிறது.

நேற்றைய சம்பவம் நிகழ்ந்தது தெரிந்தவுடன் CPI ML கட்சியின் தோழர் Divya Bharathi அங்கு சென்று சேர்ந்தார். THE PROHIBITION OF EMPLOYMENT AS MANUAL SCAVENGERS AND THEIR REHABILITATION ACT, 2013 பிரிவுகள் 7 மற்றும் 8ன் கீழும் வன்கொடுமை தடுப்பு (திருத்த) சட்டம் 3 (1) (j)வின் கீழும் குடியிருப்போர் சங்க செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீதும் தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் முதல் தகவல் அறிக்கையை இறந்தவரின் மனைவி முத்துலெட்சுமி (அவர் 7 மாத கருவை முதன் முறையாகச் சுமக்கும் இளம் பெண்) எழுதுவதற்கு உதவி செய்தார்.

இன்று காலை (7 ஆகஸ்ட்) சோலைநாதன் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான அருந்ததிமக்கள் வாழும் மேலவாசல் முன்புள்ள (பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில்) சாலை மறிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

‘பேளுவது நீங்களா? அள்ளுவது நாங்களா?‘, ‘ஆளுவது நீங்களா? சாவது நாங்களா?‘ போன்ற உணர்ச்சிகரமான முழக்கங்கள் காற்றை அதிர வைத்தன. காவல்துறை குவிக்கப்பட்டது. RDO பேச்சு வார்த்தைக்கு வந்தார். இறுதியில் 10 லட்சம் இழப்பீடு ஒரு மணி நேரத்தில் வழங்கவும், பிற கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர், தோழர் திவ்யாவிடம் ரூபாய் 10 லட்சத்திற்கான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டன. (முதல் தவணையாக இரண்டு லட்சத்திற்கான காசோலை தரப்பட்டுள்ளது. மீதி 8 லட்சம் 23ந் தேதி வாங்கி தருவதாக கூறியிருக்கிறார்கள்…)

நிற்க, தமிழ் கூறும் நல்லுலகத்தின் கவனத்திற்கான செய்திகள்

1. மதுரையில் மேற்படி பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இதுதான் முதல் வழக்கு.

2. ரூ பத்து லட்சம் என்ற நீதிமன்ற உத்தரவை சம்பவம் நடந்த மறுநாளே, தமிழகத்தில் நான் அறிந்தவரை, பெற்ற முதல் வழக்கு.

இந்த நல்ல விஷயங்களுக்கு அப்பால்…

1. FIRல் Occupier ஆன குடியிருப்போர் நல சங்க செயலாளர் அல்லது வேறு எவரின் பெயரும் சேர்க்கப்படவில்லை. குற்றவாளி இல்லாமலேயே குற்றம் நிகழ்ந்துள்ள ஆச்சரியமான சம்பவம் இது!. (இன்று மாலையில் சிலர் கைது என்று தகவல். யார் என்று தெரியவில்லை.)

2. Vicarious liability என்று நீதிமன்றம் குறிப்பிட்டு, அதாவது, (தீண்டாமை மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும்) குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு தவறிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை தமிழக அரசு மீறியுள்ளது. குடியிருப்போர் சங்கத்தினரை கட்டாயப்படுத்தி அவர்களிடமிருந்து பணத்தை (அதற்கான காசோலையை) பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த சமயத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். அரசியல் சட்ட ஒழுங்கு (Constitutional morality) என்று டாக்டர் அம்பேத்கர் ஒன்றைக் குறிப்பிட்டார். அதனைப் போராடித்தான் உருவாக்க வேண்டும் என்றார். பழைய நம்பிக்கைகளின் அடிப்படையிலான பொதுவான சமூக ஒழுக்கம் பிற்போக்கானது என்றார்.

அரசு அதிகாரிகள் அரசியலமைப்புச் சட்ட ஒழுக்கத்தைப் பின்பற்ற, மற்றொரு முறை தவறியிருக்கின்றனர். சிலருக்கு மலக்குழி மரணம் சாதாரணமானது என்ற ‘பொது ஒழுக்கத்தைப் பின்பற்றியுள்ளனர்.

ஆனால், எமது கட்சியினர், சிஐடியூ, எஐடியுசி மற்றும் தமிழ்புலிகள், ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, விசிக என்ற கம்யூனிஸ்ட்- தலித் செயல்வீரர்கள் களம் கண்டு முன்னேறி வருகின்றனர்.

முன்னின்ற அனைத்து செயல்வீரர்களையும் பாராட்டுகிறேன்.

Leave a Response