
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத்தியில் நேற்று நடந்தது. இதற்காக மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 3.45 மணியளவில் தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். தொடர்ந்து நடைமேடையில் கட்சியினரைப் பார்த்து கையசைத்தவாறு நடந்து சென்றார். பின்னர் மேடையில் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து மேடையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொதுச்செயலாளர் ஆனந்த் துவக்கவுரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, விஜய் பேசியதாவது….
சிங்கத்தோட சத்தம் 8 கிமீ தூரத்திற்கு அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கைக்கு வராது. உயிருள்ள மிருகத்தையே வேட்டையாடும். எவ்வளவு பசி இருந்தாலும், உயிர் இல்லாத கெட்டுப் போனதைத் தொடாது. ஆனால், தொட்டால் விடாது. காட்டில் தனது எல்லையைத் தானே வகுக்கும்.
அதுக்கு கூட்டமா இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். அப்படியே இருந்தாலும், அஞ்சாமல் கெத்தா வந்து தண்ணி காட்டும். எப்பவும் அதன் தனித்தன்மையை இழக்காது. இந்த மண்ணுக்கு வந்ததும் ஒரே ஒருத்தர் தான் நினைவுக்கு வந்தார். அவர் எம்ஜிஆர். அவருடன் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரைப் போன்ற எண்ணம் கொண்ட விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை எப்போதும் மறக்க முடியாது. நம் அரசியல் உண்மையானது. உணர்வுபூர்வமானது. அடுத்தாண்டு 2026 இல் வரலாறு திரும்பப் போகுது என்று உறுதியாக சொல்ற மாநாடு. நமக்கு எதிரான கூக்குரலை சிரிப்புடன் நாம் கடந்து வந்துள்ளோம்.
பாசிச பாஜவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைக்க நாம என்ன உலக மகா ஊழல் கட்சியா? வெகுஜன மக்கள் படை நாம். அதனால அடிமை கூட்டணி நமக்கு எதுக்கு? நம்ம கூட்டணி சுய மரியாதை கூட்டணியாக இருக்கும். நம்மை நம்பி வருவோருக்கு ஆட்சி, அதிகாரம் நிச்சயம் உண்டு. 2026 இல் இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி. திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டியே.
ஒன்றிய பாஜக அரசு 3 ஆம் முறையாக ஆட்சிக்கு வந்தது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்குக் கெடுதல் செய்யவா?
தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையினரால் அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். அது போதும். உங்களின் முரட்டுப் பிடிவாதத்தால் தான் நீட் தேர்வு நடக்கிறது என சொல்லவே மனசு வலிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான எதையும் செய்ய மாட்டீர்கள். மைனாரிட்டி ஆட்சி நடத்த உங்களுக்கு ஒரு கூட்டணி. ஊழல் கட்சிகளை மிரட்டி 2029 வரை ஒரு பயணம் போயிடலாம் என நினைக்கிறீர்கள். தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? எப்படி ஓட்டு போடுவார்கள்? கீழடி ஆதாரத்தை மறைத்து எங்களது நாகரீகத்தையும், ஆதாரத்தையும் மறைத்து ஏமாற்ற நினைக்காதீர்கள். மத நல்லிணக்கம் உள்ள மண் இது.
ஸ்டாலின் அங்கிள், மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள். உங்கள் ஆட்சியில் நியாயம் இருக்கா? ஊழல் இல்லாத ஆட்சியா இது? பெண்கள், குழந்தைகள், இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். மக்களே நீங்கள் சொல்லுங்கள். ‘செய்வோம், செய்வோம்’ என்றார்களே, சொன்னதை எல்லாம் செய்தார்களா? இது சாதாரணமுழக்கம்தான். கூடிய சீக்கிரம் மக்களை சந்திக்கப் போகிறேன். அதற்கு பிறகு இது இடி முழக்கமாக, போர் முழக்கமாக மாறும். அது உங்களை ஒருநிமிடம்கூட நிம்மதியாக தூங்கவிடாது.
நான் மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் வந்துள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியைத் தொடங்கியுள்ளோம்.
உங்களது எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது. தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஒரு மாஸ். அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்டிக் காப்பது? அந்தக் கட்சி இப்போது எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவித் தொண்டர்கள் தவிக்கிறார்கள். என்ன வேஷம் போட்டு பாஜக இங்க வந்தாலும் அவங்க வேலை ஆகாது. விரைவில் மக்களை போய் சந்திப்பேன். 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து ஓட்டு போடணும்.
இவ்வாறு அவர் பேசினார்.


