
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவடைய
இருந்தது. இந்நிலையில், தன்கர் திடீரென ஜூலை 21,2025 இரவு தனது பதவியை விட்டு விலகினார்.
உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்தும் மருத்துவ ஆலோசனைக்குக் கட்டுப்பட்டும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 67(ஏ) பிரிவின் கீழ் குடியரசு துணைத் தலைவர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என்று அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதவி விலகல் கடிதம் மின்னல் வேகத்தில் ஏற்கப்பட்டது.அதோடு பிரதமர் மோடி உடனடியாக, தன்கருக்கு ஓய்வுக்கால வாழ்த்துகளைப் பதிவு செய்தார்.
பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்த பின்னர் தன்கர் எங்கிருக்கிறார்?, எப்படியிருக்கிறார்? என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஜெகதீப் தன்கர் பதவி விலகலுக்குப் பின்னர் அவர் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. அவரது குடும்பத்தினரோ, அவருடைய அலுவலக அதிகாரிகளோ அவரது இருப்பிடம் பற்றி இன்னும் எதுவும் உறுதிபட எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், “நான் ‘லாபட்டா லேடீஸ்’ என்ற திரைப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ‘லாபட்டா குடியரசு துணைத் தலைவர்’ என்று இதுவரை கேள்விப்படவில்லை என்று குறிப்பிட்டு, தன்கரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளைத் தணிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு பாமஉ சஞ்சய் ராவத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், “ஜெகதீப் தன்கர் எங்கே? அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவுகின்றன. அவருடைய அலுவலக அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய நலன் பற்றியும், இருப்பிடம் பற்றியும் தகவல்களை அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகிறது” என்று கூறியிருந்தார். மேலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் தன்கர் பற்றி கவலைப்படுவதால், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்வேன் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாமஉ சு.வெங்கடேசன், ஏற்கனவே குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் திடீரென ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பாஜகவைச் சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவ்வளவு பெரிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார்? என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.
இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டெல்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர். ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்? அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
பல இலட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத் தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதற்றத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் ராஜினாமாவின் பின்னணியில் பெரிய கதையே உள்ளது. மாநிலங்களவையில் ஒரு ஒரு காலத்தில் ஆவேசமாகப் பேசி வந்த தன்கர், தற்போது அமைதியாகிவிட்டார். ஜெகதீப்தன்கர் ஒருவார்த்தை கூடப் பேச முடியாத நிலையில் ஏன் உள்ளார்? என இராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளர்.
இப்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஜெகதீப் தன்கர் குறித்துக் கேள்வியெழுப்பியும் ஒன்றிய அரசு அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும்,அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வமற்ற தகவலும் தில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.


