
பொள்ளாச்சியில் உதவாக்கரை வழக்குரைஞர் என்று பெயரெடுத்த உதயநிதிக்கு மாமா பெண் ஹன்சிகா மீது காதல். எப்படியாவது அவரை திருமணம் செய்ய நினைக்கும் அவருக்கு, பெண் கொடுக்க மறுக்கிறார் மாமா. காரணம் எந்த வழக்கிலும் வெற்றி பெற முடியாத உப்புமா வக்கீல் என்று இவருக்கு இருக்கும் பெயர்! ஒரு நாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பாவின் முன்பாகே நண்பர்களின் கேலி கிண்டல் எல்லை மீறிப் போக, உதயநிதியை கண்டபடி திட்டிவிடுகிறார் ஹன்சிகா.
மனசு நொந்துபோய் சென்னைக்கு வந்து அங்கு வக்கீலாக உள்ள உறவினர் விவேக்குடன் சேர்ந்து வழக்குக்காக அலைகிறார். ஒரு வழக்கும் கிடைக்காமல் விரக்தியடைந்த நிலையில், அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நள்ளிரவில் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓட்டி வரும் பெரிய கோடீஸ்வரனின் வாரிசு, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி 6 பேரைக் கொல்கிறார்.
ஆனால் இந்தியா முழுதும் புகழ்பெற்ற வழக்குரைஞர் பிரகாஷ்ராஜ் அந்த வாரிசுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விடுகிறார். இந்த விவகாரத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தால், நாமும் பிரபலமாகலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்று திட்டமிட்டு பொது நல வழக்குத் தொடர்கிறார் உதயநிதி. அதன் பிறகுதான் அவருக்கு பல பிரச்சினைகள். இவற்றை எப்படிச் சமாளிக்கிறார்? ஹன்சிகாவைக் கைப்பிடிக்கிறாரா? பொது நல வழக்கில் வென்றாரா? என்பது படம்.
முதன் முறையாக மிகவும் பொறுப்பான ஒரு வேடத்தை ஏற்று அதில் இயல்பாக நடித்திருக்கிறார் உதயநிதி. ஒருபக்கம் ராதாரவி, மறுபக்கம் ஆதிசேஷனாக நிற்கும் பிரகாஷ்ராஜ்.. இருவருக்கும் இடையில் நின்று தன்னாலும் கச்சிதமான நடிப்பைத் தர முடியும் என்று காட்டியிருக்கிறார்.
நடைபாதையோரம் சிறு நீர் கழிக்கப் போவார் உதயநிதி. அப்போது ஒரு கூட்டம் வரும்… ‘அய்யா கொஞ்சம் தள்ளிப் போங்க.. நாங்க படுக்கிற இடம் இது’ என்று அவர்கள் இரந்து நிற்கும்போது மனசு கரைந்துபோகிறது. அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
பார்ப்பவர் மனசுக்கு ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள். நீதி மன்றக் காட்சிகளில் ராதாரவி, பிரகாஷ்ராஜுக்கு இணையாக நிற்கிறார் உதயநிதி. ஹன்சிகாவுக்கு ஆசிரியை வேடம். வெறும் அழகுப் பொம்மையாக வந்து போகாமல் காதலனுக்கு பொறுப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாத்திரம். இந்த மாதிரி வேடத்தில் அவரைப் பார்ப்பது நிஜமாகவே ஒரு மாறுதல்தான்.
படத்தில் கட்டாயம் சொல்லியே தீர வேண்டிய பாத்திரம் ராதா ரவி. மனசில் ஆழப் பதிந்துவிட்டார், தனபால் என்ற நீதிபதி வேடத்தில். காது கிழிய பிரகாஷ்ராஜ் கத்தினாலும், ‘உட்காருங்க ஆதிசேஷன்’ மிக மென்மையாய் அவரைக் காலி பண்ணும் இடம் செம.
நீதிபதியான தன் உத்தரவை மதிக்காமல் பிரகாஷ்ராஜ் திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்க, அப்போது எடுக்கிறாரே ஒரு விஸ்வரூம்… ‘இதான்யா ராதாரவி.. இதான்டா அனுபவம் என்பது… இதுக்குப் பேர்தான் உடல்மொழி..’ என்றெல்லாம் சொல்ல வைத்துவிட்டார். ராதாரவி.
பிரகாஷ் ராஜ் சத்தம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் கச்சிதமான நடிப்பு. இறுதிக்காட்சியில் சாட்சியாய் வந்து நம்மை கலங்க வைக்கும் அந்த வந்தவாசி நபரின் நடிப்பு, போலீசின் கவனத்தை மாற்றும் டீக்கடைக்காரர், உதயநிதிக்கு நோஞ்சான் பாதுகாவலராக வந்து, சட்டென்று ஒரு திருப்பம் தரும் அந்த காவலர்… அருமை!
சந்தோஷ் நாராயணனின் இசையும் பாடல்களும். ஆனால் மதியின் ஒளிப்பதிவு காட்சிகளை மனசுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது.
மனிதன் – புனிதன்


