
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டம் இடம்பெற்றுள்ளது.இந்தத் திட்டத்தில்
மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தித்திணிப்பு இருப்பதால் தமிழ்நாடு இதில் இணைய மறுத்துவிட்டது.முந்தைய திமுக அரசு இதில் உறுதியாக இருந்த காரணத்தால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம்
மூலமாக தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி
வைத்துள்ளது.
இது கடந்த திமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையானது.இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில்,
ஒன்றிய கல்வி அமைச்சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியது. பிஎம்ஸ்ரீ பள்ளித்
திட்டத்தின்கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
தவெக தலைமையில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தவெக என்ன முடிவெடுக்கும், முந்தைய திமுக அரசு போல எதிர்ப்பு தெரிவிக்குமா? அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா? நிறுத்தி வைக்கப்பட்ட கல்விக்கான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும்? என பல கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது….
கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்துசேரவில்லை.இது மாணவர்களுக்கானது.எந்தக் காரணத்துக்காகவும் அதை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேசமயம் எந்தவித மறைமுக அழுத்தத்துக்கும் நாங்கள் அடிபணிபவர்கள் கிடையாது.கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.இருமொழிக் கொள்கை என்பது கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை.அதில் மாற்றுக் கருத்தே கிடையாது என்று கூறினார்.


