
திமுக ஆட்சியில்,டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10 அதற்கு மேலும் விற்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தன.
இப்போது புதிய ஆட்சி அமைந்தும் அது தொடர்கிறது.
அப்போது அந்தக் கூடுதல் பணம் திமுகவினருக்குக் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.இப்போது அந்தப்பணம் யாருக்குப் போகிறது என்றால்?
மதுக்கடைகளின் நிர்வாகச் செலவினங்களை டாஸ்மாக் நிர்வாகம் முறையாகவும், முழுமையாகவும் ஏற்காமல், அதைக் கடைப் பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் என வாய்வழி வழங்கிய உத்தரவு காரணமாக ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான்.இந்த முறைகேடுகளுக்கு வழி வகுத்துள்ளது என்று புதியகாரணம் சொல்லப்படுகிறது.
அதோடு,டாஸ்மாக் கடைகளுக்கு ஏற்றிவரப்படும் மதுபான பாட்டில்களில் பெட்டிக்கு தலா ரூ.5 மற்றும் கடைக்கு தலா ரூ.200 வீதம் கணக்கிட்டு சுமைப்பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.இதேபோல,காலி மதுபான பாட்டில்களைச் சேகரிப்பவர் மற்றும் மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவருக்கு, பார் வாடகை,உடையும் மதுபான பாட்டிலுக்கான தொகை,மின் கட்டணம்,இணைய வசதி, சுகாதாரம் மற்றும் வங்கிக்குச் சென்று பணம் செலுத்துவது ஆகியவற்றுக்கு பெரிய தொகை செலவாகிறது.
அதாவது, காலி பாட்டில்களை சேகரிக்க வருபவருக்கு ரூ.800, மதுபாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்ட வருபவருக்கு ரூ.800, காலிபாட்டில ரூபாய் தாள் கமிஷன் 10 சதவீதப்படி,ரூ.2,500,மதுக்கூட வாடகை ஒப்பந்ததாரருக்கு ரூ.1,000, மதுபான பாட்டில் உடைந்து போவதற்கு ரூ.1000, மின் கட்டணம் (டாஸ்மாக் நிர்வாகம் வழங்குவதைத் தவிர்த்து) ரூ.200,அலுவலகம் சென்று வருவதற்கு ரூ.200,வங்கியில் பணம் கட்டச் செல்லும் செலவு ரூ.200,இன்டர்நெட் வசதி பெற ரூ.200, சுகாதார செலவுக்கு ரூ.200,பாதுகாப்புச் செலவு ரூ.500,மதுபானங்கள் இனாம் செலவு ரூ.500, தண்ணீர் கேன் செலவு ரூ.60 என மொத்தம் ரூ.8160 செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மாதத்திற்கு கணக்கிடும்போது ரூ.2 இலட்சத்து 44 ஆயிரத்து 800 செலவு ஏற்படுகிறது.
அதேபோல், மாதா மாதம் கையூட்டு செலவு விவரமும் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மாவட்ட மேலாளருக்கு ரூ.10 ஆயிரம், உதவி மேலாளருக்கு ரூ.2 ஆயிரம், அலுவலக பணியாளர்களுக்கு (எண்ணிக்கைக்கு ஏற்ப) ரூ.10 ஆயிரம், கலால் (வருவாய் ஆய்வாளர், துணை கமிஷனர்) ரூ.5 ஆயிரம், கலால் (உதவி கமிஷனர்) ரூ.5 ஆயிரம், கட்டிட உரிமையாளருக்கு வாடகை ரூ.60 ஆயிரம், மதுபானம் இறக்கு கூலி (பெட்டி ஒன்றுக்கு ரூ.5 வீதம்) ரூ.15 ஆயிரம், முதுநிலை மண்டல மேலாளர் ரூ.5 ஆயிரம், அரசியல் நன்கொடை ரூ.5 ஆயிரம், காலி பாட்டில் ஒப்பந்ததாரர் ரூ.3 ஆயிரம், மீடியா ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.10 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர,குறிப்பிட்டுக் கூறமுடியாத சில செலவினங்கள் உள்ளன.ஆனால்,இந்தத் தொகையை அரசு தருவதில்லை. அனைத்தும் டாஸ்மாக் கடை ஊழியர்களின் மேல்தான் விழுகின்றன.இந்த அன்றாடச் செலவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?
இதனால்தான் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கப்படுகிறது என்று காரணம் சொல்கிறார்கள்.
திமுக ஆட்சியில் இது நடந்தது என்றால் அது திமுகவின் குற்றம் இப்போது நடந்தால் அது டாஸ்மாக் ஊழியர்களின் குற்றமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால்,இதுவரை புதிய ஆட்சியாளர்கள் இந்தக் கேள்விக்கு விடை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


