
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்….
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் நேற்று, வியாழக்கிழமை (18.12.2025) கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்
சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.
இச்சந்திப்பின்போது தமிழ்த்தேசியப் பேரவையினரால், இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், புதிய அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை
அனுபவிக்கக்கூடிய சமஸ்டி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு, இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், பொருளாதார ரீதியாகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாது. தமிழ்நாட்டோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும் தொடர்பாடலையும் உருவாக்காமல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியென்பதும் பெரிய சவாலாகவே இருக்கும்.
இதன் பின்னணியில் இலங்கையின் மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் விரும்பும் தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
அத்தோடு, தமிழ்நாடு மற்றும் ஈழக் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாகவும் உரையாடி இருந்தார்கள்.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழ்நாடு மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினையை இலங்கை அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும்
முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இலங்கையில் காலூன்றி வருவதனையும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண தமிழ்நாடு அரசு தலையிடவேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார்கள்.
சந்திப்பின் முடிவில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பாகவும் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினை தொடர்பாகவும் தனித்தனியான கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்தார்.
தன்னாலியன்ற அனைத்தையும் உங்களுக்காகச் செய்வேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உடனிருந்தார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


