
ஆடி மாதம் முதல் தேதியை தலையாடி என்று சொல்லி தமிழ்நாட்டின் நதிக்கரையோரங்களில் கொண்டாடுகிறார்கள்.
தமிழீழத்திலும் ஆடி முதல்நாளைக் கொண்டாடுகிறார்கள்.
அங்கு, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா,யாழ்ப்பாணம் நாவற்குழியில் சிறப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து அவ்வியக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியதாவது….
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா ஆடிப்பிறப்புத் தினமான வியாழக்கிழமை (17.07.2025) நாவற்குழி முத்தமிழ் சனசமூக நிலைய முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மக்களின் காலக்கணிப்பீட்டையும் அவர்தம் பகிர்ந்துண்ணும் உணவுப் பண்பாட்டையும் எடுத்தியம்பும் பண்பாட்டுப் பண்டிகைகளாகத் தைப்பொங்கலும் ஆடிப்பிறப்பும் அமைகின்றன.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறுமாத காலம் உத்தராயண காலம் எனவும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சணாயண காலம் எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் உத்தராயண காலத் தொடக்க நாள் தைப்பொங்கல் எனவும் தட்சணாயண தொடக்க நாள் ஆடிப்பிறப்பு எனவும் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் இவ்விரு தினங்களையும் கிராமங்களில் அவ்வூர் மக்களுடன் இணைந்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு ஆடிப்பிறப்பை நாவற்குழியில் முத்தமிழ் கிராம மக்களுடன் கூழும் கொழுக்கட்டையும் ஆக்கிக் கொண்டாடியது.
இவ்விழாவில் நானும், இயக்கத்தின் கலை, இலக்கிய அணியின் துணைச்செயலாளர் கை.சரவணன் அவர்களும் பங்கேற்றிருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடல் பிரித்தாலும் நாட்டெல்லைக் கோடுகள் பிரித்தாலும் சிந்தையிலும் செயலிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் இணைந்தே பயணிக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் சான்று.


