எடப்பாடியை அவமானப்படுத்திய விஜய் – வியப்பூட்டும் விமர்சனங்கள்

2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவுன் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் சேரும் என்பது போன்ற கருத்துகளை அதிமுகவினர் சொல்லிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியும் அந்த அர்த்தத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள பதிவில்…

தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம்.

எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் மட்டும்தான். அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம்.

மாற்றிப் பேசுவதும் ஏற்றிப் பேசுவதும், வேண்டாம் என்றால் ஆள் வைத்து தூற்றிப் பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர். தான் எடுத்த முடிவை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை. இதுதான் உண்மை வரலாறு.

சரித்திர சிறப்பு பெறப்போகும் மாநாடு முடித்து, தலைவர் விஜய்யின் வெற்றிப் பயணம் முடித்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் செய்து, நம் தலைவர் தலைமை ஏற்று வரும் சமத்துவ சமதர்ம சக்திகளை அரவணைப்போம். மண்ணுக்கும் மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பாஜக, குடும்பப்பற்று திமுக இருவரையும் தோற்கடிப்போம்.

பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம். ஊடகக் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு வெளியானதும் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் அவமானப்படுத்திவிட்டார் என்கிற விமர்சனங்களும் வரத் தொடங்கியுள்ளன.

விஜய் கட்சியும் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று பூடகமாக எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.அப்படி நடக்காது என்று விஜய் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

இதிலென்ன அவமானம்?

விஜய் கட்சி கூட்டணிக்கு வரும் என்கிற பொருளில் பேசியவர் எடப்பாடி பழனிச்சாமி.அவர் நான்காண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.இப்போது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.அவர் பேச்சுக்கு விஜய்யே நேரடியாகப் பதிலளித்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.அப்படி இல்லையெனில் அந்தக் கட்சியில் முகமறிந்த பிரபலமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்திருந்தால் கூடப் பொருத்தமாக இருந்திருக்கும்.

எடப்பாடி அவ்வளவு பெரியஆள் இல்லை,அவருக்கு இவர் போதும் என நினைத்துதான் வெகுமக்கள் அறியாத ராஜ்மோகனை விட்டு பதில் சொல்லியிருக்கிறார் விஜய் என்கிற கருத்து உலாவருகிறது. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் அவமானப்படுத்திவிட்டார் என்கிற விமர்சனங்கள் பகிரப்பட்டுவருகின்றன.

Leave a Response