பாமகவில் தொடரும் சமாதானப் பேச்சுகள் – இராமதாசு முடிவென்ன?

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் இராமதாசு ஏப்ரல் 10,2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்….

பாமக தலைவராக இன்று முதல் நான் (இராமதாசு) பொறுப்பு ஏற்று இருக்கிறேன், நிறுவனரும் நான்தான். அன்புமணி செயல் தலைவராக இருப்பார். ஜி.கே.மணி கவுரவ தலைவராக தொடர்வார். செயற்குழு, பொதுக்குழு கூடி முக்கிய முடிவு அறிவிக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்தவே பாமகவின் தலைவராகும் முடிவை எடுத்தேன். நான் தலைவரானதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி குறித்த விசயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து[ பேசி எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடைய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாமக தொண்டர்களிடையே கடும் குழப்பம் நிலவி வந்தது.இதுகுறித்து இரண்டு நாட்களாக எதுவும் பேசாமல் இருந்தார் அன்புமணி.

ஏப்ரல் 12 இரவு 10 மணி அளவில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்,,,

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.

என்று சொல்லியிருந்தார்.

பாமக தலைவராக நானே தொடர்வேன் என்ற அன்புமணியின் அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பாமகவின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்துக்கு வரவேண்டும் என நேற்று காலை இராமதாசு அழைப்பு விடுத்தார்.

உடனே, தைலாபுரம் தோட்டத்துக்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, ஆடுதுறை தலைவர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்பட 12 நிர்வாகிகள் அடுத்தடுத்து விரைந்தனர்.

அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘சுமுகமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.
இருவரும் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்’ எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.

இதைத் தொடர்ந்து இராமதாசு தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை நடைபெற்றது. அதில், ‘நிர்வாகிகள் யாரும் சோர்ந்து போகாதீர்கள், சில தினங்களில் சலசலப்பு சரியாகிவிடும்’ என இராமதாசு பேசியதாகக் கூறப்படுகிறது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப் பின் வெளியே வந்த பாமக மயிலம் சமஉ சிவக்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் கூறுகையில், ‘மாநாடு குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வேறு எந்த ஆலோசனைகளும் மேற்கொள்ளவில்லை. மாநாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் வாகன ஏற்பாடு உள்ளிட்டவற்றை எவ்வாறு செய்ய வேண்டும்’ என்று இராமதாசு அறிவுரை கூறினார் என்றனர்.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து சென்றனர். ஜி.கே.மணி மட்டும் உள்ளே இருந்தார்.

நான்தான் தலைவர் என அன்புமணி அறிவித்ததால், பாமக அவசர பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து இராமதாசு பேசியதாகக் கூறப்படுகிறது. இதேபோல், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இராமதாசு சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்பா இராமதாசுவைப் போலவே மகன் அன்புமணியும் பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாமக மற்றும் வன்னியர்சங்கம் சார்பில் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடக்க உள்ள சித்திரை முழுநிலவுப் பெருவிழா மாநாடு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது….

இந்த மாநாட்டை மருத்துவர் அய்யா தலைமையில் நடத்த இருக்கிறோம். பாமகவில் நடக்கும் விவகாரம் எங்களது உள்கட்சி விவகாரம். இது பற்றி எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம்.மருத்துவர் அய்யா வழிகாட்டுதலுடன் அவருடைய கொள்கையை நிலைநாட்ட பாமகவை ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக மாற்ற உழைத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து இராமதாசு முக்கிய நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், பாமக இளைஞர்அணித் தலைவர் முகுந்தன், வழக்கறிஞர் பாலு, வன்னியர்சங்க மாநிலச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கரையில் உள்ள அன்புமணி இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்பா மகனுக்கு இடையே நடக்கும் மோதலுக்கு முகுந்தனும் ஒரு காரணம். அவருக்கு இளைஞர் அணித் தலைவர் பதவியைக் கொடுத்ததால் இருவருக்கும் மோதல் போக்கு தொடங்கியது.இதனால், அன்புமணியை சமாதானம் செய்ய அவரது வீட்டிற்கு முகுந்தன் சென்றதாகக் கூறப்படுகிறது.

அன்புமணியைச் சந்தித்துப் பேசிய பின், தைலாபுரம் சென்று இராமதாசுடன் முகுந்தன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அன்புமணியுடன் நடந்த சமாதானப் பேச்சு குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

இப்போது மருத்துவர் இராமதாசு என்ன சொல்லப்போகிறார்? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Leave a Response