அதிமுக பாஜக கூட்டணி மீது தொண்டர்களுக்கு வெறுப்பு – புரட்சி வெடிக்கும் என பேட்டி

அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையொட்டி அக்கட்சியை ஒருங்கிணைப்புக் குழு அமைத்து செயல்பட்டுவரும் பெங்களூரு புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

தமிழ்நாட்டில் அரசியல் சூடு பிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் செயற்குழு, பொதுக்குழு, ஆட்சி மன்றக் குழு என எதனையும் கூட்டவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றுவிட்டோம் என எடப்பாடி பழனிச்சாமியும்,பல முன்னாள் அமைச்சர்களும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதிமுகவை ஊழல் ஆட்சி என்று அமித்ஷா எல்லா இடத்திலும் கூறினார்.

இந்தநிலையில், டெல்லியில் 2 மாதங்களுக்கு முன்னரே காணொலியில் திறந்து வைத்த அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடச் சென்றதாகக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்டபோது, ஆறு மாதங்கள் கழித்துத்தான் கூட்டணி குறித்துக் கூறுவோம் என்றார்.

ஆனால், அமித்ஷா சென்னை வந்ததும், பாஜக-அதிமுக கூட்டணியை அறிவித்துவிட்டார். ஜெயலலிதா இருந்தபோது, பாஜக-வுடன் கூட்டணி வைத்து, ஒருமுறை தவறு செய்துவிட்டேன். இனி எப்போதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்றார். ஆனால், அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடமானம் வைத்துவிட்டார். கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றால், மகாராஷ்டிராவின் ஷிண்டே நிலை தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படும். அமித்ஷாவுக்கு தெரியாத அரசியலே கிடையாது. இதுதான் அதிமுக-வின் இன்றைய நிலை. நிரந்தரமில்லாத எடப்பாடி பழனிச்சாமிக்காக, அண்ணாமலை பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.

இனி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிடையாது. ஓபிஎஸ்-ஐ நம்பி நாங்கள் வீண்போய்விட்டோம். சசிகலா, வீட்டிலேயே அமர்ந்து கொண்டு, அதிமுக ஒருங்கிணைக்கப்படும், ஆட்சி அமைக்கும் என்று சொல்லி வந்தார். வரும் 2031 ஆம் ஆண்டிலும் அதைத்தான் கூறுவார்.

பெயர் சொல்ல விரும்பாத ஒருவரும் அதிமுகவுக்கு எதையும் செய்யவில்லை. அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டபோது, செங்கோட்டையன் அந்த இடத்திலேயே இல்லை.

இப்போது அமைந்துள்ள பாஜக- அதிமுக கூட்டணி மீது, மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இனி யாரையும் நம்பி, அதிமுக தொண்டர்கள் இல்லை. கொடி எடுக்கும் தொண்டர்கள், முடிவெடுப்பார்கள் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொறுப்பாளர்கள் நியமித்து பணியாற்ற உள்ளனர். இதில், அதிமுக-வின் தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என அனைவரும் ஒன்று சேருவர், புரட்சி வெடிக்கும். எம்ஜிஆர் அம்மா ஆட்சி அமைப்போம்

இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.

Leave a Response