ஏப்ரல் 11,2025 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.அப்போது அமித்ஷா கூறியதாவது….
தேசிய அளவில் பாஜக தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைகிறது. ஏற்கனவே, இதே கூட்டணி தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பு பற்றிக் கேட்டபோது அதிமுக உள்விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று சொன்னார்.
இதனால் அதிமுகவில் ஓபிஎஸை சேர்க்க முடியாது என்கிற எடப்பாடியின் கருத்தை அமித்ஷா ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி….
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நலமுடன் உள்ளேன். இன்னும் 30 ஆண்டுகளாவது நாங்கள் மோடி அணியில் இருப்போம். தேஜக கூட்டணியில் உள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒரே குறிக்கோளோடு செயல்படுகிறோம். தேஜக கூட்டணியில்தான் அமமுக தொடர்கிறது.
அதிமுக கூட்டணிக்கு வந்ததால் அமமுக என்னவாகும்? ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா? என்கிற கேள்விகள் கேட்கிறீர்கள். இவை எல்லாம் வெறும் ஊகங்கள். ஓபிஎஸ் தனிமைப் படுத்தப்பட மாட்டார்.
நாங்கள் எல்லோரும் மோடியின் கரங்களை வலுப்படுத்த அந்தக் கூட்டணிக்குச் சென்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை. அது ஏற்பட சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. ஆகையால் ஓரணியில் திரள வேண்டும் என்றே சொல்லி வந்தேன்.இப்போது அது நடந்திருக்கிறது.
ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.அவர் எங்களோடு இணைவார் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.
டிடிவி.தினகரனின் இந்தப் பேட்டி மட்டுமின்றி, ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்தாக வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.அதன்படி விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.