
2024 ஜூலை பத்தாம் தேதி நடந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தல் பரப்புரையின்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் ஒன்றைப் பாடினார். இது தொடர்பாக அவர் மீது திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 4 ஆம் தேதி சாட்டை துரைமுருகன் பாடல் குறித்துப் பேசியதோடு,அதே பாடலை நானும் பாடுகிறேன்.காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது எனப் பார்க்கிறேன் எனக்கூறி அதே பாடலைப் பாடினார். அப்போது அவர் அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.
மேற்படி விவகாரத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையம் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் அவர் புகார் அனுப்பினார்.
அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 இல் தமிழ் ராஜேந்திரன் ஆகஸ்ட் மாதமே வழக்குத் தொடர்ந்தார். அக்டோபர் 7 ஆம் தேதி இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில்,நேற்று (அக்டோபர் 14) கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 தாந்தோணிமலை காவல் நிலையத்தில் இவ்வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறுகையில்,இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
சீமான் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று அவரை கைது செய்தால் அரசியல் ரீதியாக அவர் பலம்பெறுவார் என்பதால் திமுக அரசு இச்சிக்கலில் அமைதி காக்கிறது.ஆனால், நீதிமன்றம் மூலம் நெருக்கடி கொடுத்து அவரைக் கைது செய்ய தமிழ் ஆர்வலரான தமிழ் ராஜேந்திரன் முனைகிறார்.இவர் திமுக ஆதரவாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிக்கலில் திமுகஅரசு என்ன முடிவு எடுக்கப் போகிறதெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


