ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது.அதன் காரணமாக,அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
இப்போது அத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.இப்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரசு கூட்டணி வலிமையாக உள்ளது.
இதனால் கூட்டணியைப் பலப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.ஜேடியு மற்றும் ஏஜேஎஸ்யூ ஆகிய கட்சிகளுடன் புதிதாகக் கூட்டணி அமைத்துள்ளது பாஜக.
இந்நிலையில் ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சித் தலைவரும், ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஜார்க்கண்டில் லோக்ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சிக்கு வலுவான மக்கள் தளம் அமைந்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம். இதுகுறித்து கட்சியினருடன் ஆலோசித்து வருகிறோம் என்று கூறினார்.
இது பாஜகவை மிரட்டி அதிக இடங்களைப் பெறும் முயற்சி என்றும் கூடுதல் இடங்களைப் பெற்றுக் கொண்டு அக்கூட்டணியிலேயே அவர் நீடிப்பார் என்று அரசியல்நோக்கர்கள் கூறுகின்றனர்.ஆனாலும் சிராக் பஸ்வானின் இந்தப் பேச்சு தொடக்க நிலையிலேயே பாஜக கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
இதனால் ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.