மணிப்பூர் முதலமைச்சர் சர்ச்சைப் பேச்சு – மீண்டும் போராட்டம் வன்முறை

மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என மணிப்பூர் மாநில அரசை வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2023 மே மாதம் 3 ஆம் தேதி குகி, நாகா ஆகிய பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

கடந்த ஆண்டு இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.பின்னர் அது வன்முறையாக மாறி, மணிப்பூர் பற்றி எரிந்தது. தற்போது வன்முறைகள் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மணிப்பூர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளரின் வீட்டை நேற்று அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தீ வைத்துக் கொளுத்தியது.அவருடைய காருக்கும் மர்ம கும்பல் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது. சுராசுராசந்த்பூர் மாவட்டம் துய்பாங் பகுதியில் உள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் மைக்கேல் லாம்ஜாத்தங்கின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி வீ்ட்டுக்குத் தீ வைத்தனர். அங்கு நின்றிருந்த காரையும் எரித்தனர்.

பாஜக தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மைக்கேல் லாம்ஜத்தாங்கின் வீடு ஏற்கனவே 2 முறை கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குக்கிகள் பற்றி மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அவதுாறாகப் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.

அவர் அவ்வாறு பேசியதுதான் இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

பிரேன் சிங்கின் பேச்சைக் கண்டித்தும், குக்கிகள் வசிக்கும் பகுதிகளுக்கு தனி நிர்வாகம் உருவாக்கக் கோரி சுராசந்த்பூர்,காங்போக்பி மற்றும் டெங்னோபால் ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று குக்கிகள் அமைதிப் பேரணி நடத்தினர். குக்கி-ஸோ மாணவர் அமைப்பு நடத்திய பேரணியால் பல இடங்களில் கடைகள்,பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response