
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து,தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி,கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில், டெல்லியில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால்,போராட்டத்துக்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம்
நடத்துவதற்கான களப்பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.இந்தத் தடையை மீறி சிஜேபியின் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ்,அசுதோஷ் ரங்கா,அஜிங்கியா ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி
அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி உள்ளே நுழைய முற்பட்டனர்.
கையில் தேசியக்கொடியுடன் ஜந்தர் மந்தரில் நுழைந்த அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதைக் கண்டித்து டெல்லி கன்னாட்பிளேஸ், சென்ட்ரல் பார்க் பகுதியில் தேசியக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் நேற்று,இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் தங்கியிருந்த ஜாண்டேவாலன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அபிஜித் கிளம்பினார். அவரை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அதேபோல் மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய மாணவர் சங்கத்தினர்(ஏஐஎஸ்ஏ) நேகா போரா தலைமையில் மண்டி அவுஸ் அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த இரு இடங்களிலும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தீப்கே, நேகா போரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போதிலும் போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் அவரை கைது செய்ய வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட நேகா போரா அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் குற்றம் சாட்டினார். நேகா போரா தனியாகக் கைது செய்யப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் கைபேசியும் இல்லை. மீண்டும் ஒரு கடத்தல்? என்று அவரது சமூகவலைதளக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,,,
அபிஜீத் தீப்கே எங்கே? நேகா போரா எங்கே? அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதைக் கூடத் தெரிவிக்காமல் கைது செய்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலும்,மனிதநேயத்துக்கு எதிரானதும் ஆகும்.ஒன்றிய அரசு அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்தவேண்டும்.போராட்டத்தை ஒடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்வதைத் தவிர ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில்,இன்று காலை 7 ம்ணியளவில் நேகா போரா வெளியிட்டுள்ள பதிவில்…
நான் விடுவிக்கப்பட்டுவிட்டேன்.
தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் போராட்டக்காரர்களையும் விடுவியுங்கள்.
ஜனநாயகத்திற்காகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்காகவும் போராடுவதைக் குற்றச்செயலாக மாற்றமுடியாது என்று கூறியுள்ளார்.
இதனால்,சமுதாய ஆர்வலர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
அதேசமயம்,அபிஜித் தீப்கே இன்னும் விடுவிக்கப்படவில்லை.


