காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி – பாஜக ஆகியன இணைந்து அங்கு கூட்டணி ஆட்சி அமைத்தன. 2018 இல் கூட்டணி உடைந்து, ஆட்சி கவிழ்ந்தது. இதன்பிறகு அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அதோடு, 2019 ஆகஸ்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டன.
இதற்கு காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால், அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது ஒன்றிய பாஜக அரசு.
ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
இதனால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ஒன்றிய அரசு தேர்தல் நடத்த முடிவு செய்தது.
இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,ஆகஸ்ட் 16 அன்று கூறியதாவது….
நாடு முழுவதும் 2024 மக்களவைத் தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டது.பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். இத்தேர்தலில் பல வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில், மிகஅதிகபட்சமாக 58.58 சதவீத வாக்குகள் பதிவாகின. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கணிசமான வாக்குகள் பதிவாகின. இதுதான் ஜனநாயகத்தின் வலிமை.காஷ்மீர் மக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பதிலாக தேர்தல் நடைமுறையை தேர்வு செய்துள்ளனர். காஷ்மீர் மக்கள்சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஆவலுடன் காத்திருப்பதை, சமீபத்தில் அங்கு சென்றபோது அறிய முடிந்தது.
ஜம்மு காஷ்மீரில் 7 எஸ்சி தொகுதிகள், 9 எஸ்டி தொகுதிகள், 74 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. காஷ்மீரில் 87.09 இலட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 11,838 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மிதக்கும் வாக்குச்சாவடிகளும் ஏற்படுத்தப்படும்.
அரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். அம்மாநிலத்தில் 2.01 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மொத்தம் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
காஷ்மீர், அரியானா ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அங்கு முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் அத்தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தேர்தலாக இருக்கிறது.