நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக எடப்பாடி பழனிச்சாமி, ஜூலை மாதம் 15 நாட்கள் நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, அவசர செயற்குழுக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று சென்னை, இராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் ஏழு தீர்மானங்கள் திமுக அரசைக் கடுமையாகக் கண்டித்தும் ஒரு தீர்மானம் ஒன்றிய அரசை மென்மையாகக் கண்டித்தும் நிறைவேற்றப்பட்டது.
ஒன்பதாவது தீர்மானத்தில், கழகப் பொதுச்செயலாளர் வகுத்துத் தருகின்ற தேர்தல் வியூகப்படி உள்ளாட்சித் தேர்தல்,2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என சூளுரைக்கப்பட்டுள்ளது.
அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அவர் பேசியபோது, பிரிந்து சென்றாலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறவர்களைக் கட்சியில் இணைக்கலாம் என்று பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவருடைய இந்தப் பேச்சின் சாரமாக, சசிகலாவை கட்சியில் இணைக்க சம்மதமும் பன்னீர்செல்வத்தை இணைக்க சம்மதமில்லை என்றும் சொல்கிறார்கள்.
சசிகலா,ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மட்டுமின்றி டிடிவி.தினகரனையும் இணைக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் கூறியதாகத் தெரிகிறது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே எடப்பாடி இவ்வாறு பேசினார் என்கிறார்கள்.
இது, இப்போது இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரிக்கும்
சரியான திட்டம் என்று சிலர் பாராட்டுகிறார்கள்.
மேலும் மேலும் அதிமுகவை படுகுழியில் தள்ளவே வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பலர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்தக் கூட்டத்தின் எதிரொலி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
– அரி