18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசத்தின் 16 உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 12 உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்தச் சூழலில் 18 ஆவது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது. மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 26 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
ஒன்றிய பாஜக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவளித்து வருவதால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சந்திரபாபுநாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் நிபந்தனைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படும் நிலையில் உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்களவைத் தலைவர் பதவியைத் தங்களுக்கு தரும்படி சந்திரபாபுநாயுடு வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால் அதனை ஏற்க விரும்பாத ஒன்றிய பாஜக அரசு, ஆந்திராவை சேர்ந்த ஒருவருக்கு மக்களவைத் தலைவர் பதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி என்டிஆரின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனியும், ஆந்திர மாநில பாஜக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான புரந்தேஸ்வரிக்கு அந்த வாய்ப்பு வழங்க ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த அவருடைய உறவினர் பெண்ணுக்கு மக்களவைத் தலைவர் பதவி கொடுப்பதன் மூலம் சந்திரபாபுநாயுடுவை திருப்திப்படுத்த முடியும் என பாஜக கருதுகிறதாம்.
இந்நிலையில் புரந்தேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு உண்டவல்லியில் முதல்வர் சந்திரபாபுநாயுடுவை அவரது வீட்டில் திடீரென சந்தித்தார். அப்போது அவருடன் ஒன்றிய அமைச்சர் பூபதிராஜு சீனிவாசவர்மா மற்றும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
புரந்தேஸ்வரியும், சந்திரபாபுநாயுடுவும் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களவைத் தலைவர் பதவிக்காக மைத்துனி மூலம் வந்த சமாதானத் தூதை சந்திரபாபு ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.