சாகசம் விமர்சனம்

பிரஷாந்துக்கு மீண்டும் பிரகாசம் ஏற்படுத்த கருவாகி உருவாகி வெளிவந்திருக்கும் படமே ”சாகசம்”

1500 கோடி பணத்தை பிரபல வங்கியில் இருந்துகடத்தும் ஒரு பலே கொள்ளை, கொலை கும்பலிடமிருந்து அந்த பணத்தை தன் உயிரை பணயம் வைத்து மீட்டு உரியவர்களிடம் சேர்பிக்கும் ஒரு சாமான்யனின் வீர, தீரசாகசம் தான் சாகசம் படத்தின் கதை மொத்தமும் .இந்த ஆக் ஷன் கதையினுடே நாயகி நர்கீஸ் பக்கிரியுடனான பிரஷாந்தின் லவ்வையும், அப்பா நாசர், அம்மா துளசி உள்ளிட்டோருடனான சென்டிமெண்ட்டையும், தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய் உள்ளிட்டோருடனான காமெடியையும் கலந்து கட்டி கலர்புல் ஜனரஞ்சமாக வெளிவந்திருக்கிறது ”சாகசம்!”

பிரஷாந்தின் நடிப்பில் பயர் இன்னமும் அப்படியே இருப்பது சாகசம் படத்திற்கு பெரும் பலம். கட்டுமஸ்தான உடல், வசீகரமுகம் என ஜீன்ஸ் நாயகன் ஜீனியஸாய் படம் முழுக்க நிறைய சாகசங்கள் செய்வதில் தொடங்கி, அன்பு, பாசம், நேசம், காதல், காமெடி, ஆக் ஷன் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

அப்பாவின் காசு பத்தாயிரத்தை ஒரு லட்சமாக்குகிறேன். என சவால் விட்டு சூதாட்ட கிளப்புக்கு, பப்புக்கு போகும் ஆரம்ப காட்சியில் தொடங்கி கொள்ளை கும்பலிடம் சிக்கிய பணத்தையும், தன் தங்கையையும் மீட்டு காதலியை கரம் பிடிப்பது வரை ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதித்திருக்கிறார் பிரஷாந்த் வாவ்!

நாயிகி நர்கீஸ் பக்கிரி சாதுவைக் கூட சபலம் கொள்ள வைக்கும் அழகு பதுமை!

நாசர், சோனு சூட், தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்சினி, லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, பெசன்ட் ரவி, சுவாமிநாதன், லண்டன் இந்து, பரமாஜி, சாய் பிரசாந்த், ஹேமா, கிருஷ்ண வம்சி, மிப்பு, எப்.எம்.சுரேஷ், ராஜேந்திரன் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

‘கொஞ்சுற பசங்களக் காட்டிலும் கெஞ்சுற பசங்களத்தான். பெண்ணுங்களுக்கு பிடிக்கும்.’ ‘தைரியமா பயம் இல்லாது இருந்தா. கேன்சர் பேஷன்ட கூட பிழைச் சிப்பான், பயந்தா அல்சர் பேஷன்ட் கூட செத்துடுவான்.’ உள்ளிட்ட வசனங்கள், பிரஷாந்தின் தந்தை நடிகர் தியாகராஜனின் திறமையான திரைக்கதை, வசனத்திற்கு ஒரு சோறு பதம்!

தமனின் இசையில் ஆக்குபாக்கு வெற்றிலை பாக்கு. சாயாங்குலா உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ரகம் என்றால் அவை ஷாஜி குமாரின் ஒளிப்பதிவில் படமாகியிருக்கும் வெளிநாட்டு லொகேஷன்கள் பார்த்து ரசிக்க ஆசைப்படும் அழகு பகுதிகள். இப்பட பலங்கள்!

அம்மாசாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகர் அப்பா தியாகராஜனின் திரைக்கதை, வசனத்தில் எக்காலத்திற்கும் பொருந்தும் கருவை, கதையை, பிரஷாந்த் நடிக்க, நல் தமிழ் திரைப்படமாக தந்திருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜ் வர்மா.

பிரஷாந்துக்கு சாகசம் – சாமரம் வீசும்!

Leave a Response