பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி – காங்கிரசு அறிவிப்பு

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுதந்திரமாகத் தங்களது தொழிலை மீனவர்கள் செய்ய முடியவில்லை.குறிப்பாக இலங்கை மற்றும் அண்டை நாடுகள் தமிழ்நாடு மீனவர்களைக் குறிவைத்துத் தாக்குகின்றன.இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் வலையைக் கிழிப்பதும்,படகுகளைப் பறிமுதல் செய்வதும்,சிறைப்படுத்துவதும் காலங்காலமாகத் தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர்,இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.10 ஆண்டுகளாக மோடி அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?. இந்திய வெளியுறவுத்துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது.

இப்போது 2 நாட்களுக்கு முன்பு இராமேசுவரம் மீனவருக்கு உச்சபட்சமாக 6 மாதம் சிறைத் தண்டனையை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது.மோடி அரசு மீனவர்களை முழுவதுமாக கைவிட்டுவிட்டது.இதனை காங்கிரசு கடுமையாக எதிர்க்கிறது.இதைக்கண்டித்து, 27 ஆம் தேதி இராமேசுவரம் கடலில் இறங்கி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

மேலும், விவசாயிகளுக்கு எதிராகவும் மோடி அரசு செயல்படுகிறது. 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரசு சார்பில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது.கூட்டணி தொடர்பாக டெல்லியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் செல்கிறேன்.

விஜயதரணிக்கு 3 முறை எம்எல்ஏ வாய்ப்பு காங்கிரசுதான் வழங்கியது.தேசத்தைக் காப்பவர்கள் காங்கிரசில் இருப்பார்கள்.பயந்தவர்கள் வெளியேறுவார்கள்.மிக விரைவில் காங்கிரசு தேசியத் தலைவர் தமிழ்நாடு வருவார். பாஜக தலைவர்கள்,பாஜக அமைச்சர்களுக்கு உண்மையே பேசத் தெரியாது. ஊழல் கட்சி என்பது பாஜகதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response