ஒன்றிய அரசு தில்லி முதலமைச்சர் மோதலில் நடப்பது என்ன?

தில்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபானக் கொள்கையை தில்லி அரசு 2022 ஆகஸ்ட் மாதம் இரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியன தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளது. இந்தவழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023 பிப்ரவரி மாதம், தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் மூன்று அழைப்பாணைகளுக்கும் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாகப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…..

கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரைக் கைது செய்தாலும் ஒரு பைசா ஊழலைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா?. ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

மதுபானக் கொள்கை வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக இப்போது என்னைக் கைது செய்ய விரும்புகிறது. எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் அனைத்துமே எனது நேர்மைதான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலமும் பாஜக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது, என் நேர்மையைக் கெடுக்க விரும்புகிறது.

எனக்கு அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன். ஆனால், ஒரு வாதத்திற்குக் கூட அமலாக்கத் துறை அதற்குப் பதிலளிக்கவில்லை. இந்தப் போலி வழக்கில், பல ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர், தொடர்ந்து சிறையில் அடைத்து வருகின்றனர். அவர்களில் யாருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. யாருக்கு எதிராகவும் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் சட்டவிரோத சம்மன்களை நான் மதிக்க வேண்டுமா?. பாஜகவின் நோக்கம் நியாயமான விசாரணை அல்ல. மாறாக அரசியல் மிரட்டல். ஆம் ஆத்மி கட்சியை லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதே. விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து, பின்னர் என்னைக் கைது செய்ய விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால் நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது அல்லவா? அதுவே பாஜகவின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response