ஆளுநர் நியமனத்தால் அதிரடி மாற்றங்கள் – திமுக சூசகம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,17-10-2026 அன்று காலை 11.00 மணி அளவில் சென்னை,அண்ணா அறிவாலத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில்,தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….

தீர்மானம் 1: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

முதன் முதலில் எஸ் ஐ ஆர் தொடங்கப்பட்ட பீகார் மாநிலத்தில்,சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக,அங்கு பெருமளவில் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படும் செய்திகள் வந்தபோதே,2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதனைக் கண்டித்துக் குரல் எழுப்பியவர் நம் கழகத் தலைவர் அவர்கள்.மேலும்,இதனைக் கண்டித்து பீகாரில் வோட்டர் அதிகார் யாத்ரா (Voter Adhikar Yatra) என்ற பெயரில் நடைபெற்ற வாக்காளர் அதிகாரப் பயணத்திலும் அன்றைய முதலமைச்சரும் கழகத் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.கழகத் துணைப்பொதுச்செயலாளரும் கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களும் உடன் இருந்தார்.இதனையடுத்து,தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் “ எஸ் ஐ ஆர் – சிறப்பு தீவிரத் திருத்தம்” என 27.10.2025 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் “சதி வலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்கத் தயாராகி விட்டது பா.ஜ.க.” எனச் சுட்டிக்காட்டி போர்க்கொடி உயர்த்தியவர் கழகத்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை இக்கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

“பருவமழை மற்றும் பண்டிகைக் காலமான நவம்பர்,டிசம்பரில் எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது” என்பதோடு,“வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்;வாக்குத் திருட்டை முறியடிப்போம்” எனவும், “இந்த ஜனநாயக படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்;தமிழ்நாடு வெல்லும்” எனவும் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே மிகத்தீவிரமான ஆவேசக்குரல் எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே,தேர்தல் ஆணையத்தை தட்டிக்கேட்ட அரசியல்கட்சித் தலைவரும்,மாநிலத்தின் முதலமைச்சரும் நம் தலைவரே ஆவார்.நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர்கள் எஸ் ஐ ஆர் மூலம் வாக்குரிமையைப் பறிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்கள்.

“தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்” என இரண்டாவது கட்டமாக எஸ் ஐ ஆர்-ஐத் தேர்தல் ஆணையம் அறிவித்த 6 நாட்களில், தமிழ்நாட்டில் 2.11.2025 அன்று கழகத் தலைவர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி,“பீகாரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் குளறுபடிகளைக் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். கொண்டு வருவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகும்” எனவும், “தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிடத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது” எனவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றியதும் திமுகதான்!

வழக்கு தொடுத்ததோடல்லாமல்,“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என மாமல்லபுரத்தில் பிரமாண்டமான பயிற்சிக் கூட்டத்தைக் கழக நிர்வாகிகளுக்கு நடத்தி,தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்களால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பறிபோய் விடக்கூடாது எனத் தி.மு.க.வை முழுவீச்சில் களத்தில் இறக்கிவிட்டுச் செயல்பட வைத்ததையும் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

“ஏன் எஸ் ஐ ஆர்-ஐ எதிர்க்கிறோம்?” என 9.11.2025 அன்று காணொலி மூலம் கழகத்தலைவர் அவர்கள் விரிவாக விளக்கி,இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக அனைவரையும் ஒருமுகமாகத் திரட்டி,களத்தில் நிற்க வைத்து,11.11.2025 அன்று மாநிலம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக.

இதற்கிடையே,எஸ் ஐ ஆர் காரணமாகப் பெருமளவில் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு,நவம்பர் 15 அன்று மிக ஆழமான ஒரு கருத்தினைக் கழகத்தலைவர் அவர்கள் பதிவிட்டார்.காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தால் அங்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நிகழ்ந்த பிரச்சினைகள்,ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை விட்டே வெளியேறித் தனியாகப் போட்டியிட்டது,பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் என ஒரே கூட்டணியைச் சேர்ந்தோர் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் களம் கண்டது ஆகியவற்றைக் குறிப்பாலுணர்த்தி,காங்கிரஸ் இவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டுமென அதில் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால்,இவை எதுவுமே தேர்தல் ஆணையம் செய்த தவறுகளை நியாயப்படுத்தி விடமுடியாது எனவும்,தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துபோய் உள்ளதாகவும் கழகத்தலைவர் அவர்கள் அதேபதிவில் மிகக் கடுமையாகத் தேர்தல் ஆணையத்தைச் சாடியிருந்ததை நினைவூட்டுவது தற்போதைய அரசியல் சூழலில் அவசியமாகிறது.

பீகாரில் நடந்தது தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாதெனக் கழகச் செயல்வீரர்கள் இயன்றவரை உழைத்தும், பலபேரின் வாக்குரிமை பறிபோனது.இவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல.பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வருபவர்களின் பெயர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது.மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.இதுவே தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது.

எனவே,மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி,இத்தகைய அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல்ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு,உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: மாணவர் இயக்கங்களின் போராட்டங்களுக்குத் தி.மு.க. ஆதரவு.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் மாறுபட்ட கருத்துகளைப் புறந்தள்ளி,அவர்களுக்கு விவரங்களைத் தெரிவிக்காமலும் தன்னிச்சையாகவும் ஒத்திசைவு இல்லா முடிவுகளைப் பல நேர்வுகளில் எடுத்தது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 23 செப்டம்பர் 2026 அன்று விரிவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டது.அதையடுத்து,தமிழ்நாட்டில் இருந்து முதல் கண்டன அறிக்கை கழகத்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இருந்துதான் வந்தது.அரசியல் சட்டத்தை மதிக்காமல் தனியாவர்த்தனம் செய்து,அதிகார வரம்புமீறல் செய்த தலைமைத் தேர்தல்ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் உறுதிபட அவ்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தாராபுரம்,மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகக் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து,கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் பிற மாணவர் இயக்கங்களும் அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.அவர்களின் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு டெல்லி மாநிலத்தின் அனைத்து வாயில்களையும் பூட்டி வைத்ததையும்,மாணவர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவிவிட்டதையும் கழகத் தலைவர் அவர்கள்தான் உடனடியாகக் கண்டித்தார்.மேலும்,அதேநாளில்,முன்னாள் முதலமைச்சர்கள் அரவிந்த் கேஜ்ரிவால்,பினராயி விஜயன்,மமதா பானர்ஜி,மாணிக் சர்க்கார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கும்,“இது என்ன அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையா” எனக் கண்டனம் தெரிவித்தார். சென்னையிலும்,போராடிய மாணவர்களைத் த.வெ.க.அரசு கைது செய்து அடைத்து வைத்தபோது,கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்,முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மாணவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்தே காவல்துறையினர் இளைஞர்களை விடுவித்தனர்.

அக்டோபர் 14 அன்று,கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கும் தனது கண்டனத்தைக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவுசெய்தார்.இதற்கு,அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே,திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.,டெரெக் ஓபிரையன் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டனர்.நேற்று கூட,சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நாடாளுமன்றக் குழுத்தலைவர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

எனவே,எஸ் ஐ ஆர் இரத்து செய்யப்பட வேண்டுமென்பதிலும்,தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென்பதிலும் கழகத்தின் நிலைப்பாடு தெளிவானது.உறுதியானது.நிலையானது. இதற்காக ஜனநாயகச் சக்திகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.அதேவேளையில்,‘முதுகு குத்தி’யான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க இயலாது என்பதையும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதை இக்கூட்டம் மீண்டும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது.

தீர்மானம் 3 : இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் – த.வெ.க.வுக்குக் கண்டனம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்[குமாரின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராகவும்,[மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ் ஐ ஆர்க்கும் எதிராகவும் மாணவர்கள்,இளைஞர்கள் நடத்தும் போராட்டம் மாபெரும் எழுச்சியை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது.காங்கிரசால் இத்தனை ஆண்டுகளாகச் செய்யமுடியாத ஒன்றை இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திக் காட்டியுள்ளதைக் கண்டு அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சி, முதலில் விலகி நின்று வேடிக்கை பார்த்ததை நாடறியும்.பின்பு,அதற்குப் பெருகும் ஆதரவினால் வேறு வழியில்லாமல் அவர்களது போராட்டத்தில் இணைந்து ஆதரிப்பதாகத் தற்போது காட்டிக்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

அடுத்தவர் உழைப்பைத் திருடித்தின்பதும்,பிறர் முதுகில் சவாரி செய்துவிட்டு முதுகில் குத்துவதும் காங்கிரஸ் கட்சியின் பிறவிக்குணம் என்பதைக் கடந்தகால அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள்.எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.ஆனால்,இந்திய அளவில் எஸ்ஐஆரை எதிர்ப்பதாக நாடகமாடும் காங்கிரஸ் கட்சி, கேரளம் மற்றும் தமிழ்நாடு குறித்துப் பேச மறுப்பதுஇரட்டை நிலைப்பாடு ஆகும்.எஸ் ஐ ஆரில் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு என மாற்றுவது இரட்டை வேடமே.

குறிப்பாகத் தமிழ்நாட்டில்,அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதை ’பிசினஸ் லைன்’ நாளேடு புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிச் செய்தி வெளியிட்ட பின்னரும்,தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என அவர்கள் கூறி வருவது பச்சையான, அருவருப்பான சந்தர்ப்பவாதம் ஆகும்.அதிலும்,காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே த.வெ.க.விடம் சுரண்டித் தின்னும் ஒருசிலர்,‘கொடுத்த காசுக்கு மேல் கூவி’ வருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒருபுறம்,த.வெ.க.வைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் எஸ்ஐஆரை எதிர்க்கிறோம் என்றும்,எஸ் ஐ ஆர் இல்லாமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளை வென்றிருப்போம்” என்றும் பேசி வருகின்றனர்.நேற்று முன்தினம் த.வெ.க.வுடன் ஒரேமேடையில் நின்று போராட்டம் நடத்திய ஜனநாயக சக்திகள்,அக்கட்சித் தலைவர் விஜய் இதுவரை எஸ் ஐ ஆர் குறித்தோ ஞானேஷ்குமாரைப் பதவிநீக்குவது குறித்தோ பேச மறுப்பது,தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்குத் த.வெ.க.அரசில் பணி நீட்டிப்பு வழங்கப்படுவது,சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு,ஒன்றிய பா.ஜ.க.அரசால் தமிழ்நாட்டுக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் திரைமறைவில் நடைபெறும் நேர்மையற்ற ‘திருட்டு அரசியல்’ காரணமாகத்தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும்.

எஸ் ஐ ஆர் குறித்து கழகத்தை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூட்டாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்,விஜய் ஏன் இணையவில்லை எனக் கேட்கவில்லை.காங்கிரசின் ஆதரவை வாங்கிக் கொண்டு,பா.ஜ.க.வுடன் இரகசிய உறவில் இருக்கும் த.வெ.க.வைக் கண்டிக்கத் துப்பில்லாத காங்கிரஸ் கட்சி தி.மு.க.மீது குற்றம் சுமத்துவது நகைப்புக்குரியது.

எஸ் ஐ ஆர் குறித்து தேர்தலுக்குப் பிறகு எதையும் பேசாத விஜய் அவர்கள் இந்தியா கூட்டணியின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் போராட்டத்திலும் எங்கேயும் பங்கேற்கவில்லை.அந்தக்கூட்டத்தில் த.வெ.க.வில் இருந்து,ஊரை ஏமாற்ற‘ஒற்றை மனிதராய்’கண்துடைப்புக்காக வந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகனின் வாயில் இருந்தும்‘பா.ஜ.க.’ என்றோ,‘தேர்தல் ஆணையம்’ என்றோ,‘ஞானேஷ் குமார்’ என்றோ தப்பித் தவறியும் வரவில்லை என்பதை நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இப்படி தொடர்ந்து இரட்டைவேடும் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும்,தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இக்கூட்டம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன்,கூட்டணியில் இல்லாத கழகத்தை இனியும் வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது.

தீர்மானம் 4: தேர்தல் குளறுபடிகளைத் தீர்க்கக் கோரிக் குடியரசுத் தலைவரிடம் மனு.

உலகின் மிகப்பெரும் ஜனநாயகமாகத் திகழும் இந்தியாவில் தேர்தல்களின் மீதான நம்பிக்கை மக்களுக்கு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமானதாக மாறி வருகிறது.

எனவே,

அ) அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்டு, திட்டமிட்டு வாக்காளர்களை நீக்க வழிசெய்த எஸ் ஐ ஆர் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.எஸ் ஐ ஆர்-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனி வரும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மக்களின் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கான நடைமுறையாக இருக்கவேண்டுமே தவிர,வாக்குரிமையைப் பறிக்கும் சதி ஆயுதமாக மாற்றப்படக் கூடாது.போதுமான கால அவகாசமும்,வாய்ப்புகளும் தரப்பட்டே இனி அப்படிப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆ) நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது.ஈவிஎம்களில் பதிவான வாக்குகளுக்கும் விவிபேட் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பது தொடர்ந்து பல இடங்களில் கண்டுபிடிக்கப்படுவது இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்துகிறது.இதன் காரணமாகத்தான்,விவிபேட் ஸ்லிப்புகள் முழுமையாக எண்ணப்பட வேண்டுமெனத் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.இந்நிலையில்,மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும்,தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக,பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

இ) மேற்சொன்ன இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி,கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களிடம் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றில், விஜய் இதுவரை எஸ் ஐ ஆர் குறித்தோ ஞானேஷ்குமாரைப் பதவிநீக்குவது குறித்தோ பேச மறுப்பது,தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்குத் த.வெ.க.அரசில் பணி நீட்டிப்பு வழங்கப்படுவது,சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு,ஒன்றிய பா.ஜ.க.அரசால் தமிழ்நாட்டுக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் திரைமறைவில் நடைபெறும் நேர்மையற்ற ‘திருட்டு அரசியல்’ காரணமாகத்தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும் என்கிற வாசகங்கள் மூலம்,தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் அரசியல் அதிரடிகள் குறித்து முன்கூட்டியே வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response