கைபேசி மூலம் பணப்பரிமாற்றம் – புதியவிதிமுறைகள்

நவீன கைபேசிகள் பேசுவதற்காக மட்டுமின்றி புகைப்படம் மற்றும் காணொலி எடுப்பது மட்டுமின்றி திரைப்படங்கள் பார்க்கவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பணப்பரிவர்த்தனைகளும் அதன் மூலம் நடக்கின்றன.

கைபேசி மூலம் உடனடி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்று சொல்லப்படும் செயல் மிகப்பெரிய பங்காற்றுகிறது. நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது இதன்மூலம் பணம் செலுத்தும் வசதி.

ஒரு வசதியைக் கொடுத்து அதற்கு மக்கள் பழகிய பின்பு அதன் மூலம் மக்கள் பணத்தில் கைவைக்கும் உத்தியை இதிலும் தொடங்கியிருக்கிறார்கள்.

யுபிஐ மூலம் பரிமாறும் தொகைகள் குறித்து புதிய விதிமுறைகளையும், மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற பணப்பரிமாற்ற செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்துக்கும் மேலாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி உச்சவரம்பு தற்போது வரை ரூ.1 இலட்சமாக உள்ளது. இருப்பினும், யுபிஐ பரிவர்த்தனைகளுன் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு மட்டும் ரூ.5 இலட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகளை (பிபிஐ) பயன்படுத்தி செய்யப்படும் ரூ.2,000-க்கும் மேல் உள்ள சில வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீத பரிமாற்றக் கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிகரித்து வரும் ஆன்லைன் பேமண்ட் மோசடி சம்பவங்களை தடுக்க, ரூ.2,000-க்கும் அதிகமாகச் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு நான்கு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுதவிர, ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சியுடன் இணைந்து தற்போது நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்களை திறக்கவுள்ளது. அதில், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை எடுக்கலாம்.

இவற்றில் 2000 ரூபாய்க்கும் மேலான சில பரிவர்த்தனைகளுக்கு 1.1 விழுக்காடு கட்டணம் என்பது கவனிக்கத்தக்கது. இது படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.

Leave a Response