தேசிய ஒருமைப்பாடு கேலிக் கூத்தாகிவிடும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளம் முயற்சி செய்வதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

தற்போதுள்ள பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே, புதிய அணை ஒன்றினைக் கட்டுவதற்கு அனுமதிக்கவேண்டும் என மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்டு புதிய வரைவுத் திட்டம் ஒன்றினை கேரள அரசு அளித்துள்ளது.

ஏற்கெனவே கேரளம் இத்தகைய பொய்யான புகாரை எழுப்பிய போது, மத்திய நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை அமைத்த நிபுணர் குழுக்கள் பெரியாறு அணையைப் பார்வையிட்டு முழுவதுமாக நுணுகி ஆராய்ந்து, “அணை வலிமையாக உள்ளது” என அறிவித்துவிட்டன. ஆனாலும், கேரளத்தின் அச்சத்தினைப் போக்கும் வகையில் பெரியாறு அணையை மேலும் வலிமைப்படுத்தும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கிணங்க 12.5 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு அணையை வலுப்படுத்தியது. உச்சநீதிமன்றம் பெரியாறு நீர்மட்டத்தினை 145 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், மேலும், சில பணிகளைச் செய்து முடித்த பிறகு 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

பெரியாறு அணை வலிமையாக இருப்பதினால்தான் இத்தகைய ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், மீண்டும் மீண்டும் அணை பலவீனமாக இருப்பதாகப் பொய்யான கூக்குரல் எழுப்பி, புதிய அணை கட்டவேண்டும் எனக் கேரளம் இடைவிடாது முயற்சி செய்யும் வகையில் இப்போது புதிய வரைவுத் திட்டத்தை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இது முற்றிலும் எதிரானதாகும்.

தற்போதுள்ள அணை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண அரசினால் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுப்பாடு தற்போதைய தமிழ்நாடு அரசிடம் உள்ளது. எனவே, புதிய அணை கட்டுவதின் மூலம் அந்த அணையைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொள்ளக் கேரளம் திட்டமிடுகிறது. இந்திய அரசும், மத்திய நீர் மேலாண்மை ஆணையமும் கேரளத்தின் சூழ்ச்சிக்கு இரையாகக் கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையிலிருந்து பாலாறு, ஆழியாறு, உப்பாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆகிய ஆறுகள் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரள மாநிலத்திற்குள் நுழைகின்றன. அமராவதி ஆறும் சிறிது தூரம் கேரள மாநிலத்திற்குள் ஓடி பின்னர் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. அந்தச் சிறிது தூரத்திற்குள் ஒரு அணையைக் கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கக் கேரளம் முயலுகிறது.

நீர்வளம் மிகுதியாக உள்ள மாநிலம் கேரளமாகும். இங்குள்ள ஆறுகளிலிருந்து 2500 டி.எம்.சி.க்கு மேலான நீர்வளம் கிடைக்கிறது. ஆனால், அம்மாநிலத்தில் பாசனம், குடிநீர் போன்றவைக்கு 500 டி.எம்.சி. மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதற்குமேல் பயன்படுத்த அங்கு நிலவளம் இல்லை. எனவே 2000 டி.எம்.சி.க்கு மேற்பட்ட நீர் கடலில் பாய்ந்து வீணாகிறது. வீணாகும் நீரில் 10 இல் ஒரு பங்கான 200 டி.எம்.சி. நீரைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட்டால், தமிழ்நாட்டின் வறட்சிப் பகுதிகள் வளம் பெறும், உணவு தானிய உற்பத்தி கூடும். தமிழ்நாட்டிலிருந்துதான் இப்போதும் கேரளத்திற்குத் தேவையான உணவு தானியங்கள், காய்கறி, பழங்கள், ஆடு, மாடு, கோழி போன்றவை அனுப்பப்படுகின்றன. ஆனால், இவை குறித்து சிறிதும் எண்ணிப்பார்க்காமல், தமிழகத்தை வஞ்சிப்பதையே நோக்கமாகக் கொண்டு கேரள அரசியல் கட்சிகள் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குறிப்பாக, கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னணி, காங்கிரசுக் கட்சியின் முன்னணி ஆகியவைதான் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. பெரியாறு அணை நீரைத் தமிழகத்திற்கு அளிப்பதை இக்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. எனவே, தமிழ்நாட்டில் உள்ள இக்கட்சிகளின் தலைவர்கள் தங்களது அகில இந்தியத் தலைமைக்கு உண்மை நிலையை உணர்த்தி அவர்கள் மூலம் கேரள கட்சிகளைக் கண்டித்துத் திருத்துவதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிக் கூத்தாகிவிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response