தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்…..
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு, எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அவற்றை மேற்கொள்ள தமிழக அரசை அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக இடையீட்டு மனுவை தாக்கல் அளித்திருப்பது மிகச் சரியான நடவடிக்கையாகும்.
பெரியாறு அணை கட்டப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே அந்த அணை வலுவற்றது. எனவே 136 அடிக்குமேல் அணை நீரை உயர்த்தக் கூடாது என கேரளம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில், அதை ஆராய்வதற்கு வல்லுநர் குழு ஒன்றினை அமைக்குமாறு இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதற்கிணங்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பெரியாறு அணை மற்றும் சிற்றணை ஆகியவற்றை ஆய்வு செய்து இரண்டு அணைகளும் வலுவாகவே இருப்பதாகவும், ஆனால், சிற்றணைப் பகுதியில் மேலும் வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், பெரியாறு அணை நீரை 142 அடி உயரம் வரை உயர்த்தலாம் என்றும், சிற்றணையில் மராமத்துப் பணிகள் முடிவடைந்தவுடன் 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது.
அதற்கிணங்க சிற்றணையை வலுப்படுத்தும் வேலைகளுக்கான பொருட்களை அங்கு கொண்டு சென்ற தமிழக அதிகாரிகளையும், அந்தப் பணியை மேற்கொள்ள சென்ற குத்தகைதாரரையும் அங்கு செல்லவிடாமல் தடுத்து கேரள காவல்துறையினர் விரட்டினர்.
சிற்றணைப் பகுதியில் வளர்ந்திருந்த 27 மரங்களினால் அணைக்கு ஆபத்து விளையும்; அவற்றை வெட்டவேண்டும் என்ற தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கிய கேரள அரசு, ஆறே நாட்களில் அதை இரத்து செய்தது. இதன் விளைவாக கடந்த 16 ஆண்டுகளாக சிற்றணையை வலுப்படுத்தும் வேலையை தமிழகம் செய்ய முடியவில்லை. அதன் காரணமாக அணையின் நீர்மட்டத்தின் உயரத்தை 152 அடிவரை உயர்த்த முடியவில்லை. சிற்றணையை நாம் வலுப்படுத்தவிடாமல் கேரளம் தடுப்பதற்கு இதுவே காரணமாகும்.
பெரியாற்றில் ஆண்டுதோறும் உற்பத்தியாகும் நீரின் அளவு சுமார் 5000 மில்லியன் கனமீட்டர் ஆகும். இதில் கேரளத்தின் வேளாண்மை, குடிநீர், தொழிற்சாலை தேவை உள்பட அதிகப்பட்சமாக 2500 மில்லியன் கனமீட்டர் அளவு நீர் தேவைப்படும். எஞ்சிய ஏறத்தாழ 2500மில்லியன் கனமீட்டர் அளவு தண்ணீர் வீணாக அரபிக் கடலில் போய் விழுகிறது. ஆனால் தமிழகம் கேட்பது வெறும் 125 மில்லியன் கனமீட்டர் நீர் அளவே ஆகும். அதைத் தருவதற்குக் கேரளத்திற்கு மனமில்லை. ஆனால் கேரளத்திற்குத் தேவையான அரிசி மற்றும் தானியங்கள் காய்கறி, பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டை போன்றவை தமிழகத்திலிருந்து அனுப்பப்படுகின்றன. இதை மட்டுமல்ல, நெய்வேலி மின் நிலையத்திலிருந்தும், தமிழ்நாட்டில் உள்ள இரு அணுமின் நிலையங்களிலிருந்தும் 20% மின்சாரம் கேரளத்திற்கு வழங்கப்படுகிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு நமக்குத் தண்ணீர் தர கேரளம் மறுக்கிறது. இதில் கேரளத்தில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரிக் கூட்டணியும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசுக் கூட்டணியும் ஒன்றுபட்டு நிற்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு சரியான முறையில் உண்மைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து 40 ஆண்டுக் காலத்திற்கு மேலாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சியினரும் தோள் கொடுத்துத் துணை நிற்கவேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.