திமுக கூட்டணியில் கமல் கட்சி

நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு வரவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மாநில நிர்வாகிகளோடு அதன் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

85 மாவட்டச்செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கிளை அளவில் கட்சியைப் பலப்படுத்தவும் கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

கூட்டம் முடிந்த பின் பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது….

2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம், கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டு உள்ளோம் இப்போது, விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். அதேபோல் கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.கூட்டணியில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response