திமுக ஆதரவில்லாமலே டிவிட்டர் டிரெண்டாகும் கோபேக் மோடி

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகிறார். இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வருகிறார். இதற்காக அம்பாத்துரையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின்னர் அங்கு இருந்து மகிழுந்து மூலம் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து மகிழுந்து மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்குச் செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி ட்விட்டர் தளத்தில் திரும்பிப்போ மோடி எனும் கோபேக்மோடி என்கிற குறியீட்டுச்சொல் முதன்மை பெற்று வருகிறது.

ஆளும்கட்சியான திமுக அந்த குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தவில்லை என்றாலும் பொதுமக்கள் பலரும் அதைப் பயன்படுத்துவதால் அது முதலிடம் பெற்றிருக்கிறது.

அதற்கு எதிராக பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் வணக்கம் மோடி என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஆதரவு குறைவாகவே உள்ளது.

Leave a Response