பிரேசில் தேர்தல் – இடதுசாரித் தலைவர் வெற்றி

இந்த‌ பூமிப்ப‌ந்தின் நுரையீர‌ல் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் அமேசான் காட்டின் பெரும்ப‌குதியைத் த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌ ப்ரேசிலின் ஆட்சிமாற்ற‌ம் தென் அமேரிக்க‌ ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ அர‌சிய‌லில் ஒரு புதிய‌ உயிர்மூச்சைச் சுவாசிக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிற‌து.

கடந்த சில‌ ஆண்டுக‌ளாக‌ அங்கு ந‌ட‌ந்த‌ காட‌ழிப்பும் பொருளாதார‌ச் சீர்குலைவும் ம‌க்க‌ளைப் பெரும் வேலையிழ‌ப்பிலும் ப‌ஞ்ச‌த்திலும் அலைக்க‌ழித்த‌ சூழ‌லில், கோவிட் பெருந்தொற்று கார‌ண‌மாக‌ 700,000 ம‌க்க‌ள் உயிரிழ‌க்க‌, தேச‌மே ஒரு அசாதார‌ண‌ சூழ‌லில் சென்ற‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ச் சிக்கித்த‌வித்த‌து.

இந்நிலையில் த‌ற்போது ந‌ட‌ந்துமுடிந்த‌ தேர்த‌லில் சுமார் 99.97% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் முதல் தொழிலாளர் வர்க்க அதிபராகப் பதவியேற்றவ‌ரும் முன்னாள் தொழிற்சாலைத் தொழிலாளியுமான (Luiz Inácio Lula da Silva) லூலா சில்வா, 50.9% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார்.

ஆம், பிரேசிலின் முன்னாள் அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லூலா சில்வா என்று அழைக்கப்படும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரேசிலின் தேசியத் தேர்தலின் இரண்டாம் சுற்றில் தீவிர வலதுசாரியும் தற்போதைய அதிப‌ருமான‌ ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்திருக்கிறார்.

2018 இல் ந‌ட‌ந்த‌ தேர்த‌லின்போது சில்வா கைதுசெய்ய‌ப்ப‌ட்டு சிறையில‌டைக்க‌ப்ப‌ட்டு தேர்த‌லில் நிற்க‌ த‌டைவிதிக்க‌ட்டிருந்த‌ சூழ‌லில் இப்போது அவ‌ர் மீண்டும் தேர்த‌லில் வென்று அதிப‌ர் ஆகியிருப்ப‌து அம்ம‌க்க‌ளின், அந்நாட்டு பொருளாதார‌த்தில் ஒரு ந‌ம்பிக்கைக்கீற்றைப் ப‌ற்ற‌ வைத்திருப்ப‌தாக‌ ச‌ர்வ‌தேச‌த் த‌லைவ‌ர்க‌ள் க‌ருத்துத் தெரிவித்திருக்கிறார்க‌ள்.

“பிரேசில் மிகவும் ஆபத்தான இடத்தில் இருந்தது, இப்போது நாங்க‌ள் சுதந்திரத்தை மீட்டெடுத்திருக்கிறோம்.கடந்த நான்கு வருடங்கள் மிகவும் கொடூரமானவை” என்கிறார் 62 வ‌ய‌தான‌ சூழிய‌ல் செய‌ல்பாட்டாள‌ர் க‌லீய‌ன்ப‌க்.

21 வ‌ய‌து மாண‌வ‌ரான‌ காப்ரியேல் இந்த‌த் தேர்த‌ல் முடிவு ப‌ற்றி க‌ருத்துத் தெரிவிக்கும்போது, “அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒருவரை நாங்க‌ள் மீண்டும் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறோம் என்பதே இதன் பொருள். சென்ற‌ நான்கு ஆண்டுக‌ளாக‌ பெரும்பான்மையினரைப் பற்றி, அடித்த‌ட்டு ம‌க்க‌ளான‌ எங்களைப்பற்றி கவலைப்படாத ஒரு நபர் நாட்டை ஆண்டிருந்தார். எட்டாக்க‌னி ஆகிப்போன‌ என்போன்றோரின் உய‌ர்க்க‌ல்வி இனி சாத்திய‌மாகும்” என்று உண‌ர்ச்சியோடு சொல்கிறார்.

தீவிர‌ வ‌ல‌துசாரியும் தேசிய‌வாத‌ம்பேசி இராணுவ‌த்தின் ப‌ல‌த்தோடு இரும்புக்க‌ர‌ம் கொண்டு ஆட்சிசெய்த‌ Bolsonaro-வின் தோல்வி பெருமுத‌லாளிக‌ளின் உய‌ர்வுக்கு ம‌ட்டும் ஆட்சி ந‌ட‌த்துவ‌தைப் பார்த்துக்கொண்டு ம‌க்க‌ள் நீண்ட‌கால‌ம் வாழாவிருக்க‌மாட்டார்க‌ள் என்று காட்டுகிற‌து.

காடுக‌ளை அழிப்ப‌திலும், ம‌லைக‌ளைக் குடைந்து அரிய‌ க‌னிம‌ங்க‌ளைத் தோண்டியெடுத்து விற்று காசாக்குவ‌திலும், பொதுச்சொத்துக‌ளைத் த‌னியாருக்குத் தாரைவார்ப்ப‌திலும் அதிக‌ முனைப்பு காட்டியிருந்த‌ பொல்சொனாரா-வின் அர‌சு ஏழைக‌ள்மீது அதிக‌ வ‌ரிச்சுமை சும‌த்தி அவ‌ர்க‌ளை வ‌றுமை நோக்கி விர‌ட்டித்த‌ள்ளிய‌து.

சாவோ பாலோவில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய லூலா, பிள‌வுப‌ட்டிருக்கும் தனது நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க‌ப்போவ‌தாக‌ உறுதியளித்தார். “நாங்கள் அமைதி, அன்பு மற்றும் நம்பிக்கையின் புதிய காலங்களில் வாழப்போகிறோம்” என்று 77 வயதான அவர் கூறினார்.

க‌ட்ட‌ப்ப‌டாத‌ ர‌யில்நிலைய‌த்தில், இல்லாத‌ ப்ளாட்பார‌த்தில் தேநீர் விற்ற‌ இந்திய‌ பிர‌த‌ம‌ர் போல‌ல்லாது உண்மையிலேயே தொழிற்சாலையில் தொழிலாளியாக‌ப் ப‌ணியாற்றி, உழைக்கும் ம‌க்க‌ளின் இன்ன‌ல்க‌ளை அனுப‌வித்து வாழ்ந்த‌ சில்வா அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் அன்றாட‌ வாழ்வின் சிர‌ம‌ங்க‌ளை அனுப‌வித்து அறிந்த‌வ‌ர்.
அமேசான் காடுக‌ளைக் காப்ப‌தில் துவ‌ங்கி பொருளாதார‌த்தை மீட்டெடுப்ப‌து வ‌ரை க‌டும் ச‌வாலான‌ கால‌க‌ட்ட‌த்தை க‌ட‌ந்து அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தை மேம்ப‌டுத்த‌ சூளுரைத்திருக்கும் சில்வாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்.

– ஃபஷில் ப்ரீமேன் அலி (Fazil Freeman Ali)

Leave a Response