பெட்ரோல் டீசல் – இந்தியாவெங்கும் விலை உயர்வு அசாமில் மட்டும் விலை குறைந்தது

பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. கடந்த 6, 7 மற்றும் 8-ந் தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை 9-ந் தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ.90-ஐ தாண்டியது.

இந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 90 ரூபாய் 44 காசுக்கு விற்பனை ஆனது. டீசல் விலையை பொறுத்தவரையில், லிட்டருக்கு 34 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பா.சனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, மாநில சட்டசபையில், அடுத்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.60 ஆயிரத்து 784 கோடியே 3 இலட்சத்துக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது…..

அசாமில் கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, நிதி தேவைக்காக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது கூடுதல் உபரி விதி விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது.

ஆகவே, அந்த கூடுதல் உபரி வரி இரத்து செய்யப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொண்ட எனது அமைச்சரவை சகாக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதல் உபரி வரி இரத்து காரணமாக, நள்ளிரவில் இருந்து, அசாமில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.5 குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response