இந்திய ஒன்றியத்தின் குடியரசுத்தலைவராக இருக்கும் இராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய குடியரசுத்தலைவரைத் தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது.
அதன்படி புதிய குடியரசுத்தலைவரைத் தேர்வு செய்வதற்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 29 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும். போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூலை 18 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் 776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 இலட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 விழுக்காட்டுக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும்.
தற்போது ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 இலட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன.
காங்கிரசு தலைமையிலான கூட்டணிக்கு 2 இலட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநிலக் கட்சிகளுக்கு 2 இலட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன.
இதனால், பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 26 ஆயிரம் வாக்குகள் குறைவாக இருக்கிறது.
எனவே, பாஜக கூட்டணிக்கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரசு இறங்கியுள்ளது.