காங்கிரசுத் தலைவர் தேர்தல் – மல்லிகார்ஜுனகார்கே அபார வெற்றி

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரசுத் தலைவர் பதவியில் இருந்து இராகுல்காந்தி விலகினார். இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

அத்தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும்,கேரளாவைச் சேர்ந்த சசிதரூரும் போட்டியிட்டனர்.

அத்தேர்தலுக்காக இந்திய ஒன்றியம் முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

9 ஆயிரத்து 915 மாநில காங்கிரசு பிரதிநிதிகள் ஓட்டுப்போடத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். ஓட்டுப் பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரசு தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஓட்டுப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பாதுகாப்புப் பெட்டக அறையில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரசு வரலாற்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரசுத் தலைவர் ஆகியுள்ளார்.

Leave a Response