மதுரை அன்பு மீதான வருமானவரித்துறை அறிக்கையும் விமர்சனமும்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் அன்புச்செழியன். இவர் தனியாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்குகளும் நடத்தி வருகிறார். அதோடு திரைப்பட விநியோகஸ்தராகவும் உள்ளார்.

இவரது சென்னை தி.நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், மதுரையில் உள்ள வீடு, அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனைக்கு டெல்லியில் இருந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். பின்னர் தொடர்ந்து 3 நாட்களாக நடந்த இந்தச் சோதனை நேற்றுடன் முடிந்தது.

அதைத் தொடர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது……

வருமான வரித்துறையினர் கடந்த 2 ஆம் தேதி திரைப்படத் துறையுடன் தொடர்புடைய சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களின் வீடுகளில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின்போது, ​​கணக்கில் வராத பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் சோதனையின்போது, மறைக்கப்பட்ட சொத்து ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட பைனான்சியர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்குக் கணக்கில் காட்டப்படாமல், கொடுக்கப்பட்ட இரகசிய கடன்கள் மற்றும் அது தொடர்பான உறுதிமொழிப் பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் நடந்த சோதனையில், வரி ஏய்ப்புக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

மேலும், திரைப்படங்களின் வெளியீட்டில் இருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் குறித்த ஆவணங்கள் சிக்கின. ஆனால், வழக்கமாக வருமான வரித்துறைக்குக் காட்டப்பட்ட குறைவான விவரங்களும் கிடைத்தன. இதனால் வரி ஏய்ப்பு செய்த முழுமையான விவரங்கள் சிக்கியுள்ளன. வருமான வரித்துறைக்குக் காட்டப்பட்ட வருமானத்தை விட பெருமளவில் தியேட்டர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்களால் உருவாக்கப்படும் கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத இரகசிய கடன்கள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதேபோல் திரைப்பட விநியோகஸ்தர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், திரையரங்குகளில் இருந்து கணக்கில் வராத வசூலைக் காட்டுகின்றன. ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு வருமான வரித்துறைக்கு மறைத்து விட்டனர். இதன் விளைவாக உண்மையாக அரசுக்கு வரவேண்டிய வருமானம் தடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, நடந்த சோதனையில் ரூ.200 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்த மற்றும் மறைக்கப்பட்ட வருமானம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆபீஸ், வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.26 கோடி மற்றும் கணக்கில் வராத ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் இந்த அறிக்கை வெளியானவுடன், தமிழ்த் திரைப்படத்துறையில் மார்வாடிகள் ஆதிக்கம் நிறைந்திருந்தது. தமிழ்த்திரைப்படங்கள் தயாரிக்க வட்டிக்குக் கடன் கொடுப்பது பெரும்பாலும் மார்வாடிகள்தாம். தமிழ்த்திரையுலகினரின் உழைப்பு மொத்தமும் அவர்களாலேயே உறிஞ்சப்பட்டு வந்தது. அவர்களுக்குப் போட்டியாக அன்புச்செழியன் என்கிற தமிழ்நாட்டுக்காரர் வந்ததைப் பொறுக்க முடியாமலே இந்தச் சோதனையும் அதற்குப் பின்பான இந்த அறிக்கையும் வெளியாகியிருக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response