இந்திய ஒன்றியத்தின் 14 ஆவது குடியரசுத்துணைத்தலைவர் தேர்வானார் – விவரங்கள்

குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது.

இதில், பாஜக கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரசுத் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் (80) நிறுத்தப்பட்டனர்.

இத்தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். பாஜக வுக்கு மக்களவையில் 303 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 91 உறுப்புனர்களும் உள்ளனர். மேலும், அதிமுக, பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தன.

அதே சமயம், எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. திரிணாமுல் காங்கிரசுக் கட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, ஜெகதீப் தன்கர் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதியானது.

இந்நிலையில், துணைத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் மோடி முதல் நபராக காலை 10 மணிக்கு வந்து வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்தனர். காங்கிரசுத் தலைவர்கள் சோனியா காந்தி, இராகுல் ஆகியோர் பிற்பகலுக்குப் பிறகு வாக்களித்தனர். முதுமை காரணமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீல்சேரில் வந்து வாக்களித்தார்.

மாநிலங்களவையில் 8 உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளதால், இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 780 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.

இதில், 725 உறுப்பினர்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். 92.94 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 15 ஓட்டுகள் செல்லாதவை. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இரவு 8 மணி அளவில் முடிவுகளை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், இந்திய ஒன்றியத்தின் 14 ஆவது குடியரசுத் துணைத்தலைவராக தன்கர் வரும் 11 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.இவர் மாநிலங்களவையை நடத்தும் அவைத்தலைவராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானா கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். சைனிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் சட்டம் பயின்று, 1979 இல் இராஜஸ்தான் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 1990 இல் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவரது சட்டப் பணி தொடர்ந்தது. ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த அவர் 1989 ஆம் ஆண்டு ஜுன்ஜுனுவில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். கட்சியில் சில கருத்து வேறுபாடு காரணமாக 1993 முதல் 1998 வரையிலும் காங்கிரசுக் கட்சியில் இருந்தார். அப்போது, இராஜஸ்தானில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், 2008 இல் பாஜகவுக்கு திரும்பிய ஜெகதீப், 2019 ஆம் ஆண்டு வரை அதிகம் அறியப்படாத தலைவராகவே இருந்துள்ளார். 2019 இல் அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அம்மாநில முதல்வர் மம்தாவுடன் பல்வேறு விசயங்களில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். ஆட்சி நிர்வாகத்தில் தன்கர் தலையிடுவதாக அவர் மீது மம்தா அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் நாடு முழுவதும் பிரபலமடைந்த தன்கர், குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response