தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை மாற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….,

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2006 ஆம் ஆண்டு சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தாய்மொழியாகத் தமிழ், இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக்கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது. தெலுங்கும், கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள், தமிழுடன் தாய்மொழியை விருப்பப்பாடமாக தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழ்மொழியுடன் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகப் படித்துத் தேர்வெழுதும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். ஒவ்வொரு மாணவரும் 10 ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாகக் கற்க சட்டப்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.மொழிப்பாடக்கொள்கை குறித்த உண்மைக்குப் புறம்பாகத் தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response