இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஒன்றியம் முழுவதும் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டு தான் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்தனர். இதனால், அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவில் படிபடியாக கொரோனா தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 முதல் 14 வயது பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்தாண்டு ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாலும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாகக் கட்டுக்குள் வந்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முழுமையாகத் தளர்த்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்றுடன் இந்தக் கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டு, 2020 மார்ச்சுக்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு இன்று முதல் திரும்புகிறது. அதே நேரம், முகக்கவசம் அணிவதும், கைகளை அடிக்கடி கழுவுவதையும் தொடர்ந்து கடைபிடிக்கும்படி மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உட்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.