பேரறிவாளனுக்குப் பிணை – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

அதில் சிலர் பரோலில் வெளியே வந்து சென்றனர். இந்நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது.

பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை. அதனால் தனக்கு பிணை வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள், ராகேஷ் திவேதி, அரிஸ்டாடில் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

பேரறிவாளனுக்குப் பிணை வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க இயலாது என ஒன்றிய அரசு கூறியது.

அதை ஏற்காத நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் செய்த கால தாமதத்தை ஏற்க முடியாது. பேரறிவாளன் உள்ள்ளிட்டோரை விடுதலை செய்யவேண்டும் என்பது மாநில அமைச்சரவையின் முடிவு என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிற போது அதே அரசியல் சாசனத்தின் 432-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டும் எப்படி கிடைக்கும் எனவும் கேள்விகள் எழுப்பினர்.

மேலும், கைதிகள் விடுதலை, தண்டனை குறைப்பு தொடர்பாக முடிவெடுக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிடும் போது, இந்திய தண்டனைச் சட்டம் 302 மாநில அரசின் பொது அமைதிக்குக் கீழ் வருகிறது. எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது.

அரசியல் சாசனப் பிரிவு 161 ன்படி ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட கொலை வழக்கில் ஒருவரை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. சட்டமன்றத்தின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் போதுமானது. அவர் புதிய முடிவு எடுக்கத் தேவை இல்லை. அரசு முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தேவை இல்லை என்று வாதிட்டார். அது தொடர்பாக சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டினர்.

மேலும், பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார் என்பதை எடுத்துரைத்த அவர், தேச தந்தையை கொலை செய்த கோட்சே கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டனர். அப்போது ஒன்றிய அரசின் கூடுதல் சோலிசிட்டர், பேரறிவாளன் மாதம் இரண்டு முறை சென்னையில் சி.பி.ஐ அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வேண்டும் என்றார்.

அது தேவை இல்லை என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், பேரறிவாளன் தங்கியுள்ள ஜோலார்பேட்டை காவல் நிலையத்திலேயே கையெழுத்திட்டால் போதுமானது என்று தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Leave a Response